Category Archives: திருமந்திரமாலை

திருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -71

பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில்
அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே

சிவபெருமான் விழுமிய முழுமுதலாம் பரனாய் நின்று தன் திருவடியான் உணரப்படும் உவமையிலாக் கலைஞானமாகிய அபரமும் மெய்ஞ்ஞானமாகிய பரமும் முறையே சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தார்க்கும், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானத்தார்க்கும் நீங்காது உடனாய் நிறைந்து அருளிச் செய்தனன். அங்ஙனம் அருளிச் செய்து உலகினில் சிவபுண்ணியங்களுள் எல்லாம் மேலானது சிவ வழி பாடாகிய பூசையாகும்.

அச் சிவபுண்ணியத்தைத் தானே செய்து காட்டும் வழி காட்டியாய் முன்னின்று திருவிடைமருதூரில் தானே தன்னை வழிபட்டுங் காட்டியருளினன். அம் முறையான் சிவவுலகத்தவர் வழிபாடும் புரிவாராயினர். அவர்களால் வழிபடப்படும் நந்தியும் அவர்கட்கு உறுதியளித்தருளும்படி ஆகமமாக ஓங்கி நின்றருளினன். ‘ஆகமம் ஆகிநின்றண்ணிப்பான் தாள்வாழ்க’ என்பதும் இவ்வுண்மையை வலியுறுத்தும்.

திருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -70

அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது
எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

சிவபெருமான் திருவருளால் அருளிச் செய்த சிவாகமம் அயன் மால் உள்ளிட்ட தேவர்களாலும் விளங்கிக்கொள்ள முடியாத அருமையானது. அச் சிவாகமங்களின்கண் சிவபெருமான் அருளிச்செய்த மெய்ப்பொருள் உண்மை கைவரச் செய்யும் சிவவுணர்வுச் சிறப்பினை அறியாவிட்டால் அளவில்லாத அவை முற்றும் நீர்மேல் எழுத்துப்போல் பயன்தாரா தொழியும்.

திருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -69

அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.

தலைமைப்பாடுடைய சிவபெருமான் திருவருளால் அருளிச் செய்த இருபத்தெட்டு ஆகமங்களின் திருப்பாட்டுக்களின் தொகை இருபத்தெட்டுக்கோடி நூறாயிரமாகும். விண்ணவராகிய தூமாயையின்கண் வாழும் அருளோன் – சதாசிவப் பேற்றினர், சிவபெருமானின் விழுமிய மாண்பினை அவ்வாகம வழி உரைத்தருளினர். சிவன் திருவடியிணையினை ஓவாது அடியேனும் எண்ணி அவ்விழுப்பொருளை ஏத்துவன்.

திருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -69

அண்ணல்  அருளால் அருளும் சிவா ஆகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.

தலைமைப்பாடுடைய சிவபெருமான் திருவருளால் அருளிச் செய்த இருபத்தெட்டு ஆகமங்களின் திருப்பாட்டுக்களின் தொகை இருபத்தெட்டுக்கோடி நூறாயிரமாகும். விண்ணவராகிய தூமாயையின்கண் வாழும் அருளோன் – சதாசிவப் பேற்றினர், சிவபெருமானின் விழுமிய மாண்பினை அவ்வாகம வழி உரைத்தருளினர். சிவன் திருவடியிணையினை ஓவாது அடியேனும் எண்ணி அவ்விழுப்பொருளை ஏத்துவன்.

திருமந்திரமாலை – பாயிரம் -ஆகமச் சிறப்பு -68

அஞ்சன  மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே. 

நீலமேனி வாலிழைபாகத்தனாகிய சிவபெருமான் இருபத்தெட்டுத் தமிழ்ச் சிவாகமங்களையும் அருளிச் செய்தனன். குறையாத திருவடியுணர்வு கைவந்த மேலோராகிய விஞ்ஞகர் என்னும் நல்லார் இருபத்தெண்மரும் அவற்றைக் கேட்டுணர்ந்தணர். இருபத்தெட்டு ஆகமங்களையும் சிவபெருமான் தனக்குரிய ஒப்பில்லாத் திருமுகங்கள் ஐந்தனுள் உச்சித் திருமுகத்தால் உரைத்தருளினன். அவற்றின்கண் கூறப்படுவதே அரும்பொருள் என்க. அரும்பொருள் – முப்பொருளுண்மை.

திருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -67

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.

செந்நெறிக்கண் பரந்து தென்னாடு எங்கணும் தொன்னாள் தொட்டுச் சிவவழிபாடாகச் செய்து வரும் செந்தமிழ்ப் பாட்டும், ஏனை இசையொலியும், இவற்றுடன் இணைந்த சிவகணிகையர் சிவபெருமானின் முழுமுதல் தன்மையை விளக்கிக் காட்டி ஆடும் ஆட்டமும் ஒருகாலமும் நீங்காத தமிழகத் தனிப்பண்புகளை ஏற்றுக்கொள்ள மாட்டாதார் புலை வேள்வி விருப்பினராய் ஒன்றாக நல்லது கொல்லாமை என்னும் சிறந்த நோன்பாகிய விரதமில்லாதாராய்க் கொலை வேள்வி செய்வர். அவ் வேள்விப்பயன் நுகரும் துறக்கவுலகத்துச் சென்று மாலும் அயனும் போல் ஒருவரோடொருவர் முரணிச் சண்டையிடுவாராயினர். ஈட்டுமிடம் – பயன் நுகருமிடம்.

திருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -66

ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே.

அறுவகைச் சமயங்களையும் ஆறங்கங்களாகக் கொண்டு திகழும் தமிழ் மாமறையினை ஓதியருளிய சிவபெருமானை மண்ணகத்தார் உய்யப் பெண்ணொரு கூறாகத் திகழும் அவன்தன் பேரருட் குணத்தைத் திருவடியுணர்வோடு ஓதியுணர்வார் இல்லை. இவ்வுண்மை தொன்மையது, நன்மையது, மென்மையது, அழியாவிழுமியது, முழுமையது என உணராது அயன்மொழி அங்கங்களையும் வேதங்களையும் அவையே பேறெனக் கொண்டு பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்குகின்றார்கள்.

திருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -65

திரு நெறி ஆவது சித்த சித்து அன்றிப்
பெரு நெறி ஆய பிரானை நினைந்து
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும்
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே.

திருநெறி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது அறிவிக்க அறியும் சித்தும் அறிவித்தாலும் அறியுந்தன்மையாகிய அறிவில்லாத அசித்தும் அல்லாதவன் சிவன். இயல்பாகவே விளங்கும் பேரறிவினையுடையவன் அவன். சித்து – அறிவுடையது. அசித்து – அறிவில்லது. அவன் வகுத்தருளிய நன்னெறி பெருநெறி என வழங்கப்பெறும். அந் நெறியின் முதல்வனும் சிவபெருமானே. அப் பெருமானையே நினைக்கும் திருவடி யுணர்வை நல்கியருளும் சிவகுரு எழுந்தருள்வது குருநெறியாகிய சிவமாநெறிக்கண் என்று கொள்க. அதுவே திருவடியின்கண்கூடச் செய்யும் ஒப்பில்லாத் தனிநெறி. இவற்றை ஒருங்கு ஓதுவது மறைமுடிவாம் வேதாந்தம் எனப்படும். மூவர் தமிழ் மறையும், முனிவராம் மணிமொழியார் தமிழ் மறை முடிவுமென இஞ்ஞான்றும் கொண்டு ஒழுகுவதே செந்நெறிச் செல்வரின் சீரிய கடன்.

திருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -64

இருக்கில் இருக்கும் எண் இலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே

அளிவில்லாத மந்திரங்களில் சிவன் எழுந்தருள்வன். பொருந்தியுள்ள மூலத்திடத்தும் ஓம் என்னும் மூலமந்திரத்தினிடத்தும் இருப்பன். ஞாயிறும் திங்களும் ஒளி வீசும்படி ஆருயிர்களின் உடம்பகத்துக் காணும் மயிர்க்கால்தோறும் அருள்ஒளி தோன்றும். அதனால் அங்குச் சிவன் உறைந்தருள்வன். அருகுகின்ற என்பது அருக்கின்ற எனத் திரிந்து நின்றது: அருகுதல் – பொருந்துதல்.

திருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -63

இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர் வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே.

இருக்காகிய மந்திரங்களின் தொகுப்பு ஆதிமறை என்ப. அம் மறையினுள் உணர்வையுருக்கும் பொருள்சேர் புகழ்ப் பாடலால் சிறந்தனவற்றை விருப்புடன் சிவவேதியர் சொல்லுவர். கண்ணன் முதலிய தேவர்கட்கும் மூலகுருவாய் எழுந்தருளுபவன் சிவனே. கண்ணன் முக்கண்ணன் எனலுமாம்.