கிரக பெயர்ச்சி பலன்கள் அறிய

அன்பு சார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.

                 கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை அவரவர்கள் அறிய தன் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சார பலன், அஷ்ட வர்க்கம், மூர்த்தி நிர்ணயம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கோசார கிரகம், தொடும் நிலை அல்லது அதை நோக்கி நகரும் நிலை அல்லது அதை விட்டு விலகி நகரும் நிலை இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு பலன் அறிந்தால் அதிகபட்சமான சரியான பலனை அறிய முடியும் என்பது ஜோதிட வல்லுனர்களின் அபிப்பிராயம்.

                 சிந்தித்துப் பார்த்தால் சரியென்றுதான் படுகிறது. இதில் மறுப்பதற்கோ மாறுபட்ட கருத்திற்கோ இடமில்லை. அதனால் பொதுவாக ராசி பலனை அறிந்து கொண்டாலும் கிரக பெயர்ச்சி பலன்களை துல்லியமாக அறிய அவரவர்களின் ஜோதிடர்களை மேலே கூறிய வழிகளில் ஆராய சொல்லி பலன் அறிந்து கொள்வது சாலச் சிறந்தது.

                 கிரக பெயர்ச்சி ஏற்படுவதினால் உண்டாகும் சுப அசுப தன்மைகளில் சில ராசி நேயர்கள் அசுப தன்மைகளை அனுபவிக்க நேரும் போது பரிகாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை நாம் சிந்திக்க நேரிடுகிறது.

                 ஜோதிட அடிப்படை தெரியாதவர்கள் கூட நவகிரகங்களின் திருத்தலங்கள் அறிந்து வைத்திருப்பது நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கிரக பெயர்ச்சி காலங்களில் பெயர்ச்சி கிரகத்தின் திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு வருதல் அங்கு பூஜைகளில் கலந்து கொள்ளல் போன்றவை பரிகாரமாகும். இது ஒரு விதம்.

                 எனக்கு ஜோதிடத்தில் ஊக்கம் தந்து ஜோதிட நுணுக்கங்களை நன்கறிந்த, ஜோதிடத்தில் மிகுந்த அனுபவம் உள்ள உயர்திரு. எஸ்.சுயம் பிரகாஷ் அய்யா அவர்களிடம் இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்துக்கள் எனக்கு உடன்பட்டவையாய் இருந்தது அதை வாசகர் முன் வைக்கிறேன்.

                 அவரிடம் நான், என்னங்கய்யா சனி மாறுது, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி அப்படீன்னு சில ராசிக்காரர்கள் அசுப பலனை அனுபவிப்பார்களே என்ன செய்யறது? திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் தீர்த்தமாடி சனி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வர சொல்லிவிட வேண்டியதுதான், அவர்கள் அசுப பலன் குறையும் தானே என்றேன். அதற்கு அவர் என்ன ஆத்மா சனி பகவான் திருநள்ளாறில் மட்டும்தான் இருக்காரா என்ற வினாவை என்னிடம் எழுப்பினார்.

                 நான் அதற்கு நீங்க கேக்கறது புரியலீங்க அய்யா என்றேன். அதற்கு அவர் ஆத்மா நான் சொல்றது என்னென்னா உதாரணத்துக்கு யூ.எஸ்-ல் இருக்கிறவங்களுக்கும் இதே சனி பெயர்ச்சி உண்டு அப்ப அவங்களை திருநள்ளாறு வர சொன்னால் அவர்களால் வர முடியுமா? என்று கேட்டார். அதற்கு நான், தேவைன்னா வந்து தானே ஆகனும் என்றேன்.

                 அப்படியில்லை ஆத்மா, சாஸ்திரம், ஜோதிடம் சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் ஒரு ஜோதிடனுக்கு தெரிய வேண்டிய விஷயங்கள் யந்திரம், தந்திரம், மந்திரம் பூஜை முறைகள் மற்றும் சிற்பம், வாஸ்து, இசை இது எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும், அப்படி தெரிந்திருந்தால் மட்டுமே முழுமையான ஜோதிடனாக முடியும்.

                 ஆத்மா, பூஜைகளின் மூலம் மந்திரங்களினால் கலசத்தில் இறைவனை ஆவாஹனம் செய்து சங்கல்பத்தின் மூலம் நமது தேவைகளை சமர்ப்பிக்கும் போது அதற்கு உண்டான பலனை நாம் அடையலாம்.

                 இப்ப நான் சொன்னதை சிந்தித்துப் பார், அப்படி நீ சிந்தித்து பார்த்தால் யூ.எஸ்-ல் இருக்கிறவங்க அவங்க இருக்கிற இடத்திலேயே பரிகாரம் செய்துக்க முடியும், மந்திர, யந்திர, தந்திர சாஸ்திரம் அப்படித்தான் சொல்கிறது என்றார்.

                 யோசித்து பார்த்த போது எனக்கும் இது சரியென்றுபட்டது, திருநள்ளாறு, ஆலங்குடி, காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இந்த முறையை பின்பற்றி பயன் பெறுங்கள்.

உத்தான பாதாசனம்

 

 செய்முறை:

                நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு உடம்பின் பக்கவாட்டில் ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி, சிறிது நேரம் அப்படியே நிறுத்தி பின் மெதுவாக கால்களை இறக்கவும். சாதாரண மூச்சுடன் செய்யவும், 2 முதல் 4 முறை செய்யலாம்.

 பலன்கள்:

                அடிவயிறு இறுக்கம் கொடுக்கும். ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து நாடி நரம்புகள் தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப் பின் இந்த ஆசனம் செய்தால் தொந்தி விழாமல் வயிறு சுருங்கும்.

பஸ்சிமோத்தாசனம்

செய்முறை:

                மல்லாந்து படுத்த நிலையில் இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலினால் கால்களின் பெருவிரலை பிடிக்கவும், விரல்கள் எட்டவில்லையானால், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலை பிடிக்கவும். முகத்தால் கால்களின் மூட்டுகளைத் தொட முயற்சிப்பதோடு, மூச்சை வெளியேவிட்ட நிலையில் வயிற்றுப் பகுதியை மெதுவாக எக்கவும். கைகளின் இரு மூட்டுகளும் தரையைத் தொட்ட நிலையில் வைக்கவும். 2 முதல் 4 முறை செய்யலாம், தலையைக் கொஞ்சம் கொஞ்சமாய் குனியச் செய்யவும், ஒரு முறைக்கு ஒரு முறை சற்று இளைப்பாறி மீண்டும் செய்யலாம்.

 

பலன்கள்:

                கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, கணையம் இவைகள் புத்துணர்ச்சி பெற்று, இவ்வுறுப்புகள் சம்பந்தபட்ட நோய்கள் எதுவாயினும் முற்றிலும் நீங்கும். பசியின்மை, நீரழிவு நோய் நீங்கும். பெண்கள் இவ்வாசனத்தை செய்து வந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி மற்றும் மலட்டுத்தனம் நீங்கும்.

பர்வதாசனம்

 

செய்முறை:

                பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளையும் வளைவு இல்லாமல் தலைக்கு மேல் உயர்த்தி, இரு கைகளின் விரல்கள் ஒன்றின் மீது ஒன்று இறுக்காமாகச் சேர்ந்து இருக்கும்படி விரல்களை நீட்டி வைக்கவும். இரண்டு தோள்களையும் காதுகளுக்கு அருகில் வைத்து தலையை நேராக நிமிர்த்தி வைத்துக்கொள்ளவும். சுவாசத்தை மெதுவாக உள்ளிழுக்கவும், சுவாசத்தை உள்ளிழுக்கும் போது இரண்டு முழங்காலும் வளையாமல் உடல் பாகத்தை முடிந்தளவு மேலே உயர்த்தவும். உள்ளிழுத்த சுவாசம் எவ்வளவு நேரம் நிறுத்த முடிகிறதோ அந்த அளவு வரை கைகளை உச்சநிலைக்கு உயர்த்துவது நல்லது. மூன்று வினாடி வரை இந்நிலையில் இருந்து கொண்டு பின் சுவாசத்தை வெளிவிட்டுக் கொண்டே ஆசனத்தைக் கலைக்கலாம். இம்முறையை இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

 பலன்கள்:

                அடிவயிற்றில் உள்ள எல்லாத் தசைகளும், நரம்புகளும் நன்கு

இழுக்கப்பட்டு இடுப்பு பகுதி தசைகளைத் தளர்த்துகிறது. அடிவயிறு

தொப்பை விழாமல் சதைகளை நன்கு இயங்கச் செய்கிறது. கர்பாசயத்தில் பாதிக்கப்பட்ட உறுப்புகளை சீர்செய்து வலுவு கொடுக்கிறது.

உத்தித பத்மாசனம்

செய்முறை:

                 பத்மாசன நிலையில் அமர்ந்து கொண்டு, இரு கைகைளையும் தரையில் அழுத்தி உடலை மெதுவாக மேலே தூக்கவும். இந்த நிலையில் 2 அல்லது 3 வினாடிகள் இருக்கலாம்.

 பலன்கள்:

                புஜங்கள் பலப்படுவதோடு, வயிறு இறுக்கம் கொடுத்து வயிற்றில் உள்ள கோளாறுகள் நீங்குவது மட்டுமல்லாமல் பசியின்மையும் போகும்.