அசுவனி நட்சத்திரத்தைப் பற்றிய பொதுவான குறிப்புகள்

அசுவனி நட்சத்திரம் கேதுவினுடைய நட்சத்திரம்.  தாமஸ குணம் கொண்டது.  தேவ கணம்.  வாயு மண்டலம்.   சித்திரை நட்சத்திரம் பகை நட்சத்திரமாகும்.  வைத்திய துறைகளில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான நட்சத்திரம்.  இது மூன்று நட்சத்திரங்களுடன் குதிரையின் தலை போல் வானவெளியில் காட்சி தரும்.  இது ஆண் நட்சத்திரம்.  அசுவனி நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி.   

                இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நெற்றி உயர்ந்திருக்கும்.  ஆண்களானால் விரிந்த மார்பும், பெண்களானால் திரண்ட மார்பும் கொண்டவர்களாக இருப்பார்கள்.  வைத்திய துறைக்கு ஏற்றவர்கள்.  அறிவாற்றல் மிக்கவர்கள்.  பிறரை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தன்மை இருக்கும். போர் குணம் மிக்கவர்கள்.  எதையும் தைரியத்தோடு செய்யக்கூடியவர்கள்.  மிகுந்த பால் உணர்வு கொண்டவர்கள்.

                முதல் பாதத்தில் பிறந்தவர்கள்

செவ்வாயின் குணங்களான போர் குணம், முரட்டுத்தனமாக இயங்குதல், காரியம் செய்த பின் யோசித்தல், பின் விளைவுகள் பற்றி சிந்திக்காது இருத்தல், பிறருடைய உணர்வுகளை மதிக்காது இருத்தல், போன்ற குணங்கள் இருக்கும்.  தன் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருப்பார்கள்.  உடல் சம்பந்தப்பட்ட உழைப்பை அதிகமாக கொண்டவர்கள்.  சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், திருமணம் காலம் கடந்து நடைபெறும்.  மனைவியை அடக்கி ஆள்பவர்கள்.  ரசாயன சம்பந்தப்பட்ட தொழில், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், பூமி சம்பந்தப்பட்ட தொழில், மருத்துவ தொழில், இவர்களுக்கு உகந்தது.  சகோதர வர்க்கத்தாருடன் உறவு மெச்சத் தகுந்த வகையில் இருக்காது. 

                இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்..  

சுக்கிரனுடைய தன்மை இவர்களிடம் சிறிது பிரதிபலிக்கும்.  எளிதில் பிறரை கவரும் தோற்றம் உடையவர்கள்.  எதற்கெடுத்தாலும் வாதம் செய்வார்கள்.  தான் சொல்வது மட்டுமே சரியெனும் தோற்றத்தை பிறருக்கு உருவாக்கிவிடுவார்கள்.  சிக்கனக்காரர்கள்.  சில சமயம் கஞ்சன் என்றும் சொல்லத் தோன்றும்.

அடுத்தவர்களை கவர ஆடை, அலங்காரங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள்.  சுக, போகத்தை இருபாலாரும் பெரிதும் விரும்புவர்.  ஆன்மீக சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் இருக்காது.  போட்டி பந்தயங்களில் ஈடுபடுவர்.  நண்பர்களால் அடிக்கடி ஏமாற்றத்திற்கு ஆளாவார்.  வணிகம், போக்குவரத்து வாசனை திரவியம், போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றது.  அடிக்கடி சுற்றுப் பயணம் மேற்கொள்வர். 

                மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்.   

புதனுடைய தன்மை இவர்களிடம் பிரதிபலிக்கும்.  பேச்சுத் தன்மை இவர்களிடம் இயல்பாக இருக்கும்.  ஏமாற்றும் குணம் உண்டு.  அறிவு அதிகம், புத்தியும் அதிகம்.  எந்த சூழ்நிலையிலும், மனம் தளரமாட்டார்கள்.  பிறருக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவர்கள்.  இளவயதில் கஷ்டப்படுபவர்கள்.  மத்திய வயதில் சுகபோகத்திற்கு உண்டான சூழ்நிலையை சுய முயற்சியால் அடைவார்.

இனிய களத்திரம் அமையும்.  காதல் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளவர்கள்.

                நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள். 

கஷ்ட, நஷ்டத்தைப் பற்றி கவலைப் படாதவர்கள்.  உல்லாசத்திலேயே குறியாக இருப்பார்.  எந்த விஷயமாக இருந்தாலும் கடும் போராட்டத்திற்குப் பின்னரே இவர்களுக்கு கிடைக்கும்.  குடும்ப உறவுகளில் எப்போதும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.  தாய், தந்தையரை விட்டு தள்ளியிருப்பார்கள்.  விவசாயத் துறை இவர்களுக்கு மிக, மிக ஏற்றது.  திரவ சம்பந்தப்பட்ட தொழிலும் இவர்களுக்கு ஏற்றதே.  கற்பனையில் மிதப்பவர்கள் கனவுலக சஞ்சாரிகள்.  கதை எழுதுபவர்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *