99

கோள்களின் கோலாட்டம் பற்றி -கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்.

இது

 காகிதப்பூ அல்ல!!

                         காவியப்பூ!!

                                               இதை வாழ்த்தவில்லை!!

                                                                      வணங்குகிறேன்.!!

                                -கவிஞானி வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான்.

 

                நான் சோதிடன் அல்லன், சோதிடத்தை அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் காட்டுகிற சாதாரணமானவன் என்ன காரணத்தாலோ எனது நண்பர்களில் பலரும் சோதிடர்களாகவே அமைந்துவிடுகிறார்கள்.

                சோதிடம் படிக்கிறவர்கள் எல்லோரும் சோதிடர்கள் ஆவது இல்லை.முப்பத்தி ஐந்து வயது நிரம்பிய எல்லோரும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவது இல்லை அல்லவா? எந்தத் துறையிலும் உவமை சொல்ல இயலாத உயர்ந்தவர்கள் உருவாவது உண்டு.  ஓடுகிறவர்கள் எல்லோருமா” உஷா ”ஆகிவிடுகிறார்கள்?

                அதைப் போலவே தமிழ்நாட்டில், இந்திய அளவில், விரல் விட்டு எண்ணத்தக்க சோதிட மேதைகளில் முதல் வரிசை மனிதராகத் திகழுகின்றவர் அருள்மிகு மகரிஷி தயானந்த ஜோதி அவர்கள்.

                தாமரைக்குப் பக்கத்தில் இருக்கிற தவளை, தாமரைக்கு உள்ளே இருக்கிற தேனை அறிந்து கொள்ளுவது இல்லை.  அதைப்போலவே கண்கள் தமக்கு அருகில் அமைந்திருக்கும் இமைகளைத்தாமாகவே காண முடிவதில்லை.

                அருள்மிகு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களை நீண்ட காலம் நெருக்கமாக அறிந்தவர்கள் எந்த அளவிற்கு அவரை உணர்ந்து உள்ளார்கள் என்பதனை நான் தெரிந்து கொள்ளவில்லை.  ஆனால் நுணுகிப்பார்த்து, நூலாம்படையிலும் பருத்தித் தோட்டத்தை தரிசிக்கிற எனக்கு, அருள்மிகு மகரிஷி அவர்கள் பிள்ளைச் செடியாகப் படவில்ல, பிரம்மாண்டமான ஆலமராகவே தோன்றுகிறார்.

                ஒருவர் சிறந்த சோதிட மேதையாகத் திகழுவதற்குப் படிப்பு மாத்திரம் போதாது, பட்டறிவு ( அனுபவம்) மாத்திரம் போதாது, ஒழுக்கம், நெறி முறைகள் மாத்திரம் பேதாது.  இறைவனின் அருள் வேண்டும்.  நெறி முறைகளால் பக்குவப்படாத மனநிலத்தில் இறைவன் தனது ஆட்டத்தை நிகழ்த்துவது இல்லை பார்ப்பதற்கும், பழகுவதற்கும்சாதாரணர்களைப்போன்ற புறத்தோற்றம் இருந்தாலும் உள்ளத்தளவில் உயர்ந்தவர்களிடத்திலே தான் இறைவனின் ஆட்டம் நிகழுகின்றது.  அந்த வகையில் சோதிடத்தைஓதி உணர்ந்தவரான அருள்மிகு மகரிஷி அவர்கள் பட்டறிவால் பழுத்தவர் என்தோடு, ‘ உயிர் கலையான பிராணனை நிற்க வைத்து நிழலாட்டம் நடத்துகிற அறிவியல் கலையில் அகிலம் வியக்கிற தேர்ச்சி பெற்றவராக விளங்குகிறார்கள்’.

                ஆகவே, ஓதி உணர்ந்ததும், ஓதாமல் இயல்பாகக் கைவரப் பெற்ற பிறவி ஞானமுமாக, இறைவனது திருவருளால் மற்ற சோதிடர்களிடத்தில் அமையாத ஒன்று மகரிஷி தயானந்த ஜோதி அவர்களிடத்திலே மதர்த்து விளங்குகிறது என்பதை நான் உணருகிறேன்.  ஆகவேதான், ஆயிரம் அகல்களுக்கு மத்தியில் அவரால் வேள்வித் தீயாக விளக்கம் பெறமுடிகிறது.

                அருள்மிகு மகரிஷி தயானந்த ஜோதி அவர்கள் படைத்துள்ள ‘ கோள்களின் கோலட்டம் ‘ என்கிற புத்தகப் படையல் எனது பார்வைக்கு வந்ததது.  நூற்றுக்கணக்கான நூல்களுக்கு எளியேல் அணிந்துரை வழங்கி இருப்பதாலும், இந்தப் புத்தகப் பேழை நிலவையே பெயர்த்து, நெற்றிப் பொட்டாக வைப்பதற்குத் தகுந்தது என்பதை உணருகிறேன்.

                பல சோதிட நூல்கள் மேற்கோள்களின் மேலான தொகுப்பாகவே அமைந்துள்ளன.  ஒன்றில் இருக்கிற செய்தியே பிறிதொன்றில், வேறு மொழி நடையில் இடம் பிடித்திருப்பதைக் காணலாம்.  ஆனால் அருள்மிகு மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ‘ கோள்களின் கோலாட்டம் ‘ தன்னில்தானே நிமிர்ந்தும், நிலைத்தும் நிற்கத் தக்க தனித்தன்மையோடு விளங்குகின்றது.  இந்தத் தனித்தன்மைக்காகவே மகரிஷி, அவர்களின்

‘ கோள்களின்கோலாட்டம் ‘ எக்காலத்திலும் போற்றப்படும் சிறப்பினைப் பெறுகிறது.

                இந்தப் புத்தகப் பெட்டகத்தில் ‘ நட்சத்திர இயக்கம் ‘ என்கிற அதிகாரம் அழுதும், தொழுதும் சோதிட விரும்பிகள் அன்றாடம் படிக்கவேண்டிய அற்புதமான சொற்கோர்வை ஆகும்.

89

                கோள்கள் சிறந்திருந்தும் ஒருவரது வாழ்வு ஏன் சிறக்கவில்லை அல்லது, சோதனை நெருப்பு ஏன் அவரைச் சூழுகிறது என்பதனை நட்சத்திரங்களின் பலம், பலவீனம் என்கிற அடித்தளத்திலிருந்து மகரிஷி அவர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்.  இதில் உதாரணமாக கன்யா இலக்கினத்தில் பிறந்த பாரதப் பிரதமர் மாண்புமிகு நரசிம்மராவ் அவர்களுக்க அட்டமத்தோன் தசை நடக்கிறபோது, வீழ்ச்சியே இல்லாமல் விளங்குகிறாரே இதற்கு நட்சத்திரப் பலமே காரணம் என்று மகரிஷி அவர்கள் சான்றுகள் காட்டி சாதிக்கிறார்கள்.  பலரது சாதகங்களையும் மேற்கோள் காட்டி தனமது வழக்கிற்கு வலிமை சேர்த்திருக்கிற மகரிஷி அவர்களின் ஆயுவுத் திறம் பெரிதும் பாராட்டத்தக்கது.

                இராகு, கேது ஆகிய மேற்கோள்கள் பற்றி மகரிஷி அவர்களின் ஆயு, புத்தம் புதிய வெளிச்சத்தினை சோதிடப் பரப்பில் பாய்ச்சுகிறது என்பதை துணிந்து சொல்லலாம்.  இது விரைந்து பறக்கிற வெளிச்சப் பறவை தது இறகுகளிலிருந்து நவரத்தினங்களை இறக்கி வைப்பது போலத் தோன்றுகிறது. வான இயலின் வளர்ச்சியைக் கணக்கிலே கொண்டு அடிப்படை நம்பிக்கைகளுக்கு சேதாரம் நிகழாமல் அற்புதமாக மகரிஷி அவர்கள் நிழற் கோள்களைப் படம் பிடித்திருக்கிறார்கள்.

85

                ‘ உபகிரக பலன் ‘ பெரும்பாலும் நம்மவர்களால் அதிகம் பேசப்படுவதில்லை.  உபகிரகங்களைக் கருத்திலே கொள்ளாமல் முழுமையான சோதிடப் பலன்களை முன் வைத்துவிடமுடியாது.  இந்த வகையில் உபகிரக பலன் பற்றி மகரிஷி அவர்கள் ¢ வெளியிட்டிருக்கிற கருத்துக்களில் அவர்களது தனித்தன்மை பளிச்சிடுவதோடு, ஒப்பாரும், மிக்காரும் இருப்பார் என்கிற உயர்ந்த நிலைக்கு அவரை உயர்த்திக் காட்டுகிறது.  இதில் கிரகத்திற்குக் கிரகம் நிற்கும் பலன் என்ற பகுதி உச்சத்திலும் உச்சம் என்றே உரைக்க வேண்டும்.

                ‘ பாவ விதிகளில் நோய் பட்டியல் கர்மதோடம் கணிப்பு ‘ என்று வருகிற பகுதி மருத்துவ சோதிடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோர் அனைவரும் ஆழ்ந்து பயில வேண்டிய அறிவு நலம் செறிந்த பகுதி ஆகும்.

                அதைப் போலவே திருமணம், தொழில், உயிர் வாழ்க்கை, உயர்வு இவற்றை ஆராய்கிற இடங்களிலும் மகரிஷி அவர்களின் தனித்தன்மை சிறந்து விளங்குகின்றது.

                பெண்களின் சாதக ஆய்வடங்கள் பொற்குடத்திற்குப் பொட்டிட்டது போல அமைந்துள்ளது. பெரும்பாலும் ஏழாம் பாவத்திற்குள் பெண்ணைச் சிறை வைத்துவிடுகிற பொதுப் போக்கிலிருந்து மகரிஷி அவர்களின் நோக்கும், போக்கும்  பெரிதும் வேறுபட்டிருப்பதால் பெண் இனத்திற்கே பெருமை சேருகின்றது.

                தசை, புத்தி கணிப்பு எல்லோராலும் எப்போதும் பேசப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும், மகரிஷி அவர்களின் பருந்துப் பார்வை, பல புதிய அடிப்படைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.  ஒருவரது கடைக்கால் சாதகத்தைப் பார்த்ததும் படபடவென்று சொல்லிவிடக்கூடாது என்பதற்கு மகரிஷி அவர்களின் தசா புத்தி பலன்களின் சிறப்பாயவு ஒரு சரித்திரச் சான்றாக விளங்குகிறது.

                                பரிவர்த்தனங்கள் பற்றி சோதிட நூல்கள் சுட்டிக்காட்டியதும் உண்டு, தொய்வில்லாமல் ஆராய்ந்ததும் உண்டு.  ஆனால் மகரிஷி அவர்களைப் போல் இவ்வளவு சிறப்பாக விரிவாக ஆழமாக ஆய்ந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

                தனி மனிதனுக்கு மாத்திரமே சொந்த பலன் கருதி, வாழ்வியல் உண்மைகளை வகைப்படுத்தும் பலருக்கும் மத்தியில், நாட்டை நினைத்து நவக்கோள்களால் நாட்டிற்கு என்ன நிகழும், நேரும் என்பதை அருமையான ஆராய்ச்சிக் கோணத்தில் நீராழி மண்டபமாக நிலைப்படுத்தியிருக்கிறார் மகரிஷி அவர்கள்.

  1. முன்னவர்களின் மூல அறிவிற்கு இந்நூல் தலை வணக்கம் செலுத்துகிறது.
  2. முன்னவர்கள் என்பதால் மாத்திரமே அவர்தம் கூற்று முழுக்கவே உண்மை என்று இந்நூல் பேசவில்லை.
  3. பொதுவிதிகள் பொருந்துமா என்பதை நுணுகி ஆய்ந்து, முன்னவர்களுக்கு முறையான வணக்கம் சமர்ப்பிக்கிற போதே, இன்றைய பட்டறிவின் பாற்பட்ட புதிய விதிகளை இந்நூல் பூக்க வைக்கிறது,
  4. நூல் எழுதுவதற்காகச் சோதிடத்தைப் புரட்டுகிற காகிதக் கலாச்சாரத்தை மாற்றி, சோதிடத்தில் நெடுங்காலம் ஆய்வு மேற்கொண்டால் மாத்திரமே நூல் படைக்கிற அவசியத்திற்கு ஆட்பட்ட மகரிஷி அவர்களின் நூல்.
  5. ஏதேன் தோடத்து விலக்கப்படாத விருட்சமா?  காம்புகளே பகவான் விணணரசின் காமதேனுவா?
  6. விரும்பாதவருக்கும் குளிர் நிழற்குடை பிடிக்கிற கற்பக விருட்சமா? சொல் வரவில்லை.  சொல் கடந்த சூட்சமத்தைச் சொற்களால் சுட முனைவதும் பிழையாகிவிடும்.
  7. வானநூல் வல்லாருக்கும், பஞ்சாங்கத்தை மாத்திரமே அடைகாக்கும் சில சோதிடச் சேவல்களுக்கும் இடையில் இருந்த இருட்டு இடைவெளியை இந்நூல் முற்றாகத் துடைத்து எறிகிறது.
  8. முடிந்த முடிவுகள் என்று ஆராய்ச்சிக் கண்களை இறுக்கவே மூடிக்கொள்ளாமல், காற்று வரட்டும், கதவைத்திற என்பது போல ஆய்வுக்காகச் சிந்தனைக் களத்தை இந்நூல் திறந்தே வைத்திருக்கிறது.

                சோதிடர்கள் பொய்க்கலாம்,  அவர்களும் மனிதர்கள் என்பதால், சோதிடம் பிழைபடல் இயலாது.  காரணம் அது விஞ்ஞான இறுக்கம் என்பதால் இந்நூல் எனக்குச் சொல்லாமல் சுட்டுகிறது.

93

                தமிழ்நாடு ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து தக்கபடிப் பெற்ற வடலூர் வள்ளலார் அவர்களே சோதிடத்தைப் பற்றி சுவைபடக் குறிப்பிட்டுள்ளார்கள்.

                வள்ற் பெருமான் தமது இரண்டாம் திருமுறையில் தலைவி தலைவனைக் கேட்பதாகப் பத்துப் பாடல்களை அமைத்துள்ளார்.

                ‘ நான் திருவெற்றியூர் இறைவனைச் சேருவதா – திருச்சிற்றம்பத்து  இறைவனை அடைவதா என்று தலைவி கேட்பதாக

                வள்ளற் பெருமான் வசீகர வார்த்தைகளை வரிசைப்படுத்துகிறார்.  இந்தப் பகுதிக்கே ” சோதிடம் நாடல் ” என்றே பெயர் அமைந்துள்ளது.

                ” சோதிடம் பார்த்துரைப்பீர், புரிநூல் உத்தமரே” என்று தலைவி பாடுவதாகப் பத்துப் பாடல்கள் அமைந்துள்ளன. 

                வள்ளற் பெருமானிடத்தில் வாஞ்சை வணக்கமும், தமது ஞான குருவான பாண்டிச்சேரி சுவாமிகளிடத்தில் ஒடுக்கமும் உடைய  அருளாளர் மகரிஷி அவர்கள்.

                இதிலே ‘ சோதிடம் ‘ என்கிற சொல்லை ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிற போது அது சோதி + இடம்  என்றெல்லாம் நிகழிடம் பொறுத்து நீண்டிடாமல், கோள்நிலை குறித்தல் என்கிற  உட்பொருளிலேயே உறைக்கின்றது.

                இந்தியத் தத்துவ இயலை உலக இறையியலை இவர் போல எடுத்துரைவர் எங்கேனும் இல்லை என்கிற அளவில் மாபெரும் அனித இயக்கமாகத் திகழ்ந்த பகவான் ரஜனீஷ் அவர்களும் கோள் நிலைகளால் வாழ்வில் ஏற்படும் ஏற்ற மாற்றங்களைக் குறிப்பிடுகின்றார்கள்.

                                உலக அளவில் பிரிட்ஜ் ஆஃப் கேப்ரா போன்ற விளங்கியல் வல்லவர்களும் கோள்கள் எவ்வாறு மனித வாழ்வை பாதிக்கின்றன என்று குறிப்பிடுகிறார்கள்.

                உண்மையின் வித்துக்கள் விழுந்து கிடக்கின்ற சோதிடத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் தருகிற விதத்தில் ‘ ஜோதிடப் பேரொளி ‘ ‘ ஆன்ம ஞான அருள்நிதி மகரிஷி ‘ அவர்களின் இந்தப் புத்தகப் பேழை அமைந்துள்ளது.

                குண்டு மல்லி இரவெல்லாம் விழிக்கிறது, குறிஞ்சி மலர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது.  மூங்கில் பூ தலை முறைக்கு ஒருமுறை கண் சிமிட்டுகிறது.  மகரிஷியின் இந்தப் புத்தகப் பேழை நூறாண்டுகளுக்கு ஒரு முறை புத்தகப் பூ எனினும், இது காகிதப் பூ அல்ல, காவியப்பூ, இந்த முயற்சியை வாழ்த்தவில்லை, வணங்குகின்றேன்.

                                              என்றென்றும் அன்புள்ள

                                                  வலம்புரி ஜான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>