S123

கர்ம

வினை விதைத்த வழியில் விதி நடக்கும்!

  விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்!!

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம். அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம். சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.

பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே “ருண பந்தம்” எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள்.சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும். நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ? . ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ? சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ? இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய “கர்ம வினை” தான் .

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே “சஞ்சித கர்மா” எனப்படுகிறது. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது. அதுவே ‘பிராரப்தக் கர்மா’ எனப்படுகிறது. இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.

இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம்.இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர ‘ஆகாம்ய கர்மா’ என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல – கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது.அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும் . துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே. இதைத் தான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா”
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது. இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.
இதை போதிப்பது தான் ” ஹிந்து மதம் “.

There is NO cancellation of GOOD and BAD deeds .

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது. இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது. ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான்.அதேபோல பெரும் பணக்காரர்களையும் ‘துக்கங்கள்’ விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

‘வினை விதைத்த வழியில் விதி நடக்கும்’
‘விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்’

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம். நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது. அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>