திருமந்திரமாலை

திருமூலர் அல்லது திருமூல நாயனார் சேக்கிழார் சுவாமிகளால் புகழ்ந்து பேசப்பட்ட 63 நாயன்மார்களுள்ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார். இவர் சிறந்த ஞானியாய் விளங்கியவர். திருமூலர் வரலாற்றை நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியில் சுருக்கமாய்க் கூறுகிறார். இவர் வாழ்ந்த காலம் ஐந்தாவது நூற்றாண்டு. இவர் அருளிச்செய்த நூல் திருமந்திரமாலையாகும். இது 3000 பாடல்களைக் கொண்டது. இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர்.

பாயிரம் -கடவுள் வாழ்த்து -1

 ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,
நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே

ஒன்றவன்றானே – அவன் தானே ஒன்று; அவன் தனிப்பட நிற்கும்போது ஒன்று. இது கடவுள் ஒன்று எனக் கூறியது ஆகும். இரண்டவனின்னருள் – அவன் இன்னருள் இரண்டு; கடவுள் தன் அருளுடன் கூடி இருக்கும்போது இரண்டு எனப்படுவான். நின்றனன் மூன்றினுள் – கடவுள் முக் குணங்களோடு (இராசதம், தாமதம், சாத்துவீகம்) கூடியிருக்கும்போது, மூன்று என்று சொல்லப்படுவான். நான்கு உணர்ந்தான் – நான்கு வேதங்களையும் (இருக்கு, சாமம், தலவகாரம், பவுடிகம்) உணர்ந்து வெளிப் படுத்தினான். ஐந்து வென்றனன் – பொறி வாயில் ஐந்து அவித்தனன். ஆறு விரிந்தனன் – பதம், எழுத்து, மந்திரம், கலை, தத்துவம், புவனம் என்னும் ஆறு அத்துவாக்களாகப் பரந்துள்ளான். ஏழு உம்பர்ச் சென்றவன் – ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஏழு அண்டங்களையும் கடந்து நின்றவன். தான் எட்டு உணர்ந்து இருந்தான் – தான் எண் குணங்களையும் அறிந்து அவைகளுடன் உலகர் பொருட்டுச் சேர்ந்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *