images (13)

மகாசக்தி மனிதர்கள்

சிவன் நினைவு நீங்காத சிந்தை பெரும் ஞானிகளுக்கே வாய்க்கும். இறைவன் நிறைந்திருக்கும் மனம் பொன், பொருள், சொத்து, புகழ் தேடி அலையாது. அப்படி ஓடும் உள்ளத்தில் இறைவன் இருக்க மாட்டான். இந்தப் பேருண்மைக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் சரியான உதாரணமாகத் திகழ்ந்தார். அவர் பொன், பொருள், பூமி, புகழ் ஆகியவற்றை என்றுமே ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. அதனாலேயே அவர் யோகசக்திகள் பவித்திரமாகவும், சக்தி வாய்ந்தவையாகவும், மெய்ஞானத்திற்காக ஏங்கும் நல்லோரைக் காந்தமென ஈர்ப்பதாகவும் இருந்தன.

அப்படி அவர் ஈர்த்த ஒரு ஆன்மிக ஆர்வலர் சிக்கல் தலத்தைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார். நீண்ட நாட்களாக ஒரு நல்ல ஞானியைப் பின்பற்றி மெய்ஞான மார்க்கத்தில் செல்ல வேண்டும் என்று அவர் எண்ணி வந்தார். ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருந்த யாரோ இருவரில் ஒருவர் மற்றவரிடம் சொல்லிக் கொண்டு சென்றது அவர் காதில் விழுந்தது. ”நாம் திருவாரூர் சென்று தட்சிணாமூர்த்தி சுவாமிகளை அடைந்து திருத்தொண்டு செய்து வந்தால் நற்கதி அடையலாம்”

மிக ஆழமான தேடலில் உள்ள ஒரு மனிதனுக்கு பதில் எங்கிருந்தும் கிடைக்கலாம். அப்படிக் கிடைக்கின்ற பதில் உண்மையானதென்று அவன் உள்மனம் உடனடியாக அடையாளம் காட்டி விடும். அப்படியே பழனியப்ப செட்டியாரும் உணர்ந்து உடனடியாகத் துறவறம் பூண்டு திருவாரூருக்குப் பயணமாகி விட்டார். ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளை அடைந்து அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு அவருடனேயே தங்கி விட்டார். சுவாமிகளின் பக்தர்கள் அவரை பழனியப்ப சுவாமிகள் என்று அழைத்தனர்.

அக்காலகட்டத்திலேயே ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு திருவாரூரிலும் சுற்று வட்டாரத்திலும் நிறைய பக்தர்கள் உருவாகி இருந்தார்கள். அவர்களில் பலர் செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சுவாமிகளுக்கு சமாதி ஆலயம் எழுப்ப விரும்பினார்கள். தங்கள் விருப்பத்தை பழனியப்ப சுவாமிகளிடம் சொல்லி “நாங்கள் பொருள் தருகிறோம். நீங்கள் முன்னின்று முறைப்படி சமாதி ஆலயம் கட்ட உதவ வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்கள். இப்படி முன்பே ஆலயம் அமைத்து கர்ப்பக்கிரகத்திற்குள் சமாதி வைக்க குகையும், சுரங்கவழியும் ஏற்படுத்தி வைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததால் பழனியப்ப சுவாமிகளும் ஒத்துக் கொண்டார். சுவாமிகளின் திருவுளக்குறிப்பு அறிந்து அந்த ஆலயப்பணிகளைத் தொடங்கலாம் என்று பழனியப்ப சுவாமிகள் சொல்ல அவர்கள் சம்மதித்தனர்.

உடனே அனைவரும் சோமநாத சுவாமி ஆலயத்தில் தியானத்தில் வீற்றிருந்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளைச் சென்று வணங்கி நின்றனர். அவர் தியானம் முடிந்து எழுந்து நடக்க ஆரம்பித்தார். அவர்கள் பின் தொடர்ந்தனர். அவர் ஓரிடத்தில் சிறிது நேரம் நின்று விட்டுப் பின் தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார். சுவாமிகள் சிறிது நேரம் நின்ற இடமே சரியான இடம் என்று அனைவரும் பேசித் தீர்மானித்தனர். அந்த இடத்தை அடையாளம் வைத்துக் கொள்ள பழனியப்ப சுவாமிகள் அங்கிருந்த மண்ணை குவித்து வைக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு பொற்காசும் அங்கு கிடைக்கவே அவர்களுக்கு அது ஒரு ஐசுவரியமான இடமாய் பட்டது. ஆலயம் அமைக்கும் பணி ஆரம்பித்ததும் செல்வந்தர்கள் அல்லாத பொதுமக்களும் தாமாகவே முன்வந்து பணம், செங்கல், கருங்கல். சுண்ணாம்பு எனத் தங்களால் முடிந்ததைக் கொண்டு வந்து தர ஆரம்பித்தனர். பழனியப்ப சுவாமிகளின் மேற்பார்வையில் ஆலயம் உருவாகியது. காசியிலிருந்து சரபோஜி மன்னர் தருவித்துக் கொடுத்த பாண லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தி முடித்தனர். அன்றிலிருந்து அந்தக் கோயிலில் நித்திய பூஜைகள் நடக்க ஆரம்பித்தன.

ஆனால் இதில் எல்லாம் சம்பந்தப்படாதவர் போலவே ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இருந்து வந்தார். அந்தக் கோயிலில் எதிர்காலத்தில் பூஜைகள் குறைவில்லாமல் நடந்து வர வடபாதி மங்கலம் முதலியார் என்பவர் பத்து வேலி நிலம் சுவாமிகள் பேரில் தான சாசனம் எழுதி அதை சுவாமிகள் காலடியில் வைத்து பேரன்புடன் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். அந்த சாசனத்தை எடுத்த சுவாமிகள் ”அப்பா! நீ நமக்குக் கொடுத்தாய். நாம் உனக்குக் கொடுக்கிறோம். நீ வைத்துக் கொள். குறைவு வராது” என்று அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.

தஞ்சை சரபோஜி மன்னரும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் கொண்டவர். அவர் திருவாவூர் தேர் நாளன்று திருவாரூருக்கு விஜயம் செய்தார். சுவாமிகளுக்கான சமாதி ஆலயம் பற்றியும் அங்கு நடக்கும் பூஜைகள் பற்றியும் அறிந்திருந்த அவர் தன் சமஸ்தான அதிகாரியை அழைத்து “இன்று மாலை தட்சிணாமூர்த்தி சுவாமிகளைத் தரிசிக்க எண்ணி இருக்கிறேன். அந்த சமயம் அருகில் உள்ள கிராமங்களில் ஒன்றை சுவாமிகளுக்கு நான் தானமாக அளிக்க உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் சுவாமிகளின் சீடர்களிடம் தெரிவித்து, ஒரு கிராமத்தை தானம் தரத் தேர்ந்தெடுத்து வையுங்கள்” என்று கூறினார்.

சமஸ்தான அதிகாரி தானம் செய்யத் தகுந்த கிராமங்களின் பெயர்களை குறித்து வைத்துக் கொண்டு தாசில்தாரை அழைத்து அந்த சீட்டைத் தந்து சொன்னார். ”இன்று மன்னர் சுவாமிகளைத் தரிசிக்கச் செல்கிறார். இந்த சீட்டில் உள்ள கிராமங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மன்னர் வரும் சமயம் தானமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று சுவாமிகளின் சீடர்களிடம் தெரிவித்து வாருங்கள்.”

தாசில்தார் அந்தச் சீட்டுடன் சென்று பழனியப்ப சுவாமிகளைச் சந்தித்து சமஸ்தான அதிகாரி சொன்னதைச் சொன்னார். அந்தச் சீட்டை வாங்கிக் கொண்டு பழனியப்ப சுவாமிகள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளைத் தேடிச் சென்றார். கட்டிலில் படுத்திருந்த சுவாமிகள் “சகல உலகமும் நம்மிடத்தில் ஆகாயத்தில் நீல பீதாதி போல் ஏகதேசத் தோற்றமாயிருக்க, ஒருவன் சிறிது நிலம் கொடுக்கிறானாம். அதை ஒருவன் பெற்றுக் கொள்கிறானாம். இவனன்றோ கானல் நீரைப் பருகி களை தீரக் கருதினான்” என்று சொல்லவே பழனியப்ப சுவாமிகள் அந்தச் சீட்டை வீசி எறிந்து விட்டு பேசாமல் இருந்து விட்டார்.

சரபோஜி மன்னர் மாலையில் சுவாமிகளைத் தரிசிக்க வந்தார். பால், பழம் ஆகியவற்றை சுவாமிகள் முன்வைத்து அவர் காலுக்குத் தங்கச் செருப்பிட்டு, யானைத்தந்தத்தால் ஆன யோக தண்டத்தை அவருக்குச் சமர்ப்பித்து, பட்டுப் பீதாம்பரத்தால் அவரைப் போர்த்தி, பாதங்களில் பொற்காசுகள் வைத்து அவரை வணங்கி விட்டு சுவாமிகள் கையால் திருநீறு வேண்டி கைநீட்டி நின்றார். சுவாமிகள் இது எதுவும் தனக்கல்ல என்கிற பாவனையில் இருந்தாரே ஒழிய மன்னரைக் கண்டு கொள்ளவில்லை. பழனியப்ப சுவாமிகள் திருநீற்றுப் பேழையை சுவாமிகளிடம் நீட்டி ”சுவாமி! மன்னருக்கு விபூதிப்பிரசாதம் வழங்கி அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

சுவாமிகள் அதில் இருந்து விபூதியை எடுத்து மன்னரிடம் வீச அது மன்னர் கையில் விழுந்தது. அதைப்பூசிக் கொண்ட மன்னர் கிராம தானம் கேட்பார்களா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். அனைவரும் மௌனமாக இருக்கவே, மன்னர் வாய் விட்டே கேட்டார். “என்னால் உங்களுக்கு என்ன ஆக வேண்டும் என்று கட்டளையிடுங்கள்.”

சுவாமிகள் எண்ணம் புரிந்த பழனியப்ப சுவாமிகள் நாசுக்காக “மன்னர் தரும்படியாக எங்களுக்கு இங்கு எந்தக் குறையும் இல்லை” என்று சொன்னார்.

ஏமாற்றம் அடைந்த மன்னர் தன் திருப்திக்காக சுவாமிகளின் பாதங்களை 108 பொன் மொகராக்களால் அர்ச்சித்து மேலும் சில மொகராக்களை காணிக்கையாகச் செலுத்தி விட்டுக் கிளம்பினார்.

கொடுக்கிறேன் என்றதும் வாங்கிக் குவித்துக் கொள்ளும் ஆட்களை அதிகம் பார்த்துப் பழகிய நமக்கு சுவாமிகளின் நடத்தை விசித்திரமாகத் தெரியலாம். பத்து வேலி நிலமானாலும் சரி, ஒரு கிராமமே ஆனாலும் சரி வாங்கி வைத்துக் கொள்கிற மனோபாவமோ, அதற்கான அவசியமோ அந்த யோகியிடத்தில் இருக்கவில்லை.

1835 ஆம் ஆண்டு ஒரு நாள் கோயிலின் மகா மண்டபத்தில் வீற்றிருந்த சுவாமிகள் ”முடிந்தது. முடிந்தது. முற்றிலும் முடிந்தது” என்று கூறி விட்டு யோக நிஷ்டையில் மூழ்கினார். அவருடைய நிழலாகவே இருந்து வந்த பழனியப்ப சுவாமிகளுக்கு அந்த வார்த்தைகள் மூலம் சுவாமிகளின் அந்திம காலம் நெருங்கி விட்டது என்பது புரிந்து விட்டது. அவர் சுவாமிகளின் பக்த கோடிகளுக்கு செய்தி அனுப்ப, பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திருவாரூர் வந்து குவிய ஆரம்பித்தார்கள். அந்த ஆண்டு ஆவணி மாதம் பன்னிரண்டாம் நாள் சுவாமிகள் சிவனடி சேர்ந்தார். அவருடைய திருமேனிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து, கோயிலில் முன்பே தயார்ப்படுத்தி வைத்திருந்த சமாதிக்குகையில் எழுந்தருளச் செய்தனர்.

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் திருவாரூர் மாடப்புரத்தில் அமைந்திருக்கும் அவருடைய சமாதி ஆலயத்தில் நடைபெறும் குருபூஜைக்கு ஏராளமான பக்தர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். அங்கு சென்றவர்கள் மன அமைதியையும், அவர் பேரருளையும் உணர்ந்து திரும்புகிறார்கள். அவர் பிறந்த கீழாலத்தூரிலும், சென்னையில் வண்ணாரப்பேட்டையிலும் கூட அவரது ஆலயங்கள் உள்ளன. காலத்தை வென்ற யோகியின் அருளுக்கு முடிவோ, எல்லையோ இல்லை அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>