திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -21

வானப் பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே

மழைக்கும் மழையருளும் வானப் பெருங்கொண்டல் சிவபெருமான். மால் அயன் வானவர்கோன் வானவர் முதலாயினார்தம் தூவாமாயையினாலாகிய இழிந்த பிறப்பாம் ஊனப் பிறவியை ஒழித்தருளும் ஒப்பில்லாத முழுமுதல். தேவதாரு வனத்துப் போலி முனிவர்கள் ஆணவச் செருக்கால் வேள்வியினைப் புரிந்தனர். விளைவும் ஆணவச் செருக்காகிய காட்டானை அதன்கண் தோன்றிற்று. அவ்வியானையைச் சிவபெருமான் உரித்துப் போர்த்து அடக்கினன். நாட்டானை நலம் பெறுவதும் காட்டானை பொலம் பெறுவதும் காண்க. யானை ஆணவச் சார்பாம் மாயை. இவ்வுண்மை ‘தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி’ என்பதனால் உணரலாம். எம் தலைவனாகிய அவனை மனமார நினைந்து வாயாரப் புகழுங்கள். அப்பொழுது அவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பம் நுகர்தலும் உண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *