திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -25

பிறப்பு இலி பிஞ்ஞகன் பேர் அருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி மாயா விருத்தமும் ஆமே

சிவபெருமான் என்றும் பிறப்பில்லாதவன். பின்னற் சடையினையுடையவன். அளவிடப்படாத பேரருளாளன். என்றும் அழிவிலாதவன். யாவர்க்கும் குறைவிலா நிறையின்பம் அருளி அவரை விட்டு நீங்காதவன். அவனைத் தொழுங்கள். அங்ஙனம் தொழுதால் அவன் உங்களை ஒருபோதும் மறவான். மாயைக்கு மறுதலையாகிய இயற்கைப் பேரறிவினன். அன்னை அஞ்ஞை என்று வந்ததுபோல் பின்னல் பிஞ்ஞல் என்று வந்திருத்தல் அமையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *