பிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-11)

செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிப்பதற்காகவே நாம் பிறவி எடுக்கிறோம் என்பதால் செயல்களை பற்றியும் அவற்றால் விளையும் பலன்களின் வகைகள் பற்றியும் அறிந்து கொண்டு அதர்மமான செயல்களை தவிர்த்து தர்மமான செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் அவசியத்தை இந்த பாடம் விளக்குகிறது.

ஒரு செயல் தன் ஜீவனுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நன்மையாக இருந்தால் நமக்கு புண்ணியமும் தீமையாக இருந்தால் நமக்கு பாவமும் ஏற்படும்.

பாவமும் புண்ணியமும் ஒன்றை ஒன்று நீக்கிவிடாது.

நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் பாவ புண்ணியங்கள் கலந்தே இருக்கும். பாவ காரியங்கள் மட்டுமே செய்து நல்ல செயல்கள் எதுவும் செய்யாத மனிதனோ அல்லது பாவத்தை முழுதாக தவிர்த்து புண்ணியகாரியங்கள் மட்டுமே செய்யும் மனிதனோ உலகில் கிடையாது. எனவே ஒரு அயோக்கியன் சுகமாக இருக்கிறானே என்று கேள்வி கேட்பதில் அர்த்தம் இல்லை. அவன் சுகமாக இருப்பதற்கு காரணம் அவன் செய்த புண்ணியம். அவன் செய்யும் கெட்ட காரியங்களுக்கு நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான். அதே போல் நான் எப்பொழுதும் எல்லோருக்கும் நன்மை மட்டும் தான் செய்கிறேன், கடவுள் ஏன் என்னை இப்படி தண்டிக்கிறார் என்ற கேள்வியும் தவறு. பாவ புண்ணியங்களின் பலனை தனித்தனியாக அவரவருக்கு சேரவைப்பதில் இறைவன் எந்த தவறும் செய்வதில்லை.

அதிர்ஷ்டம், நம் வாழ்வில் ஏற்படும் வெற்றி-தோல்விகள், சுக-துக்கங்கள், நோய்-ஆரோக்கியம், வளமை-வறுமை, ஏற்ற-தாழ்வு போன்ற அனைத்துக்கும் காரணமாக அமைவது நமது பாவ-புண்ணியங்கள் மட்டுமே. வாழ்வில் நிகழும் பெரும்பான்மையான நிகழ்வுகளுக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம். அதிர்ஷ்டம் என்பதன் பொருள் நாம் ஏற்கனவே செய்த நற்செயல்கள் அல்லது தீயசெயல்களின் பலன் என்பது. எந்த செயலின் பயன் எப்பொழுது எந்த வகையில் நமக்கு பலனைத்தரும் என்பது மனித அறிவுக்கு எப்பொழுதுமே எட்டாது என்பதால் அதை கண்ணுக்கு தெரியாத அதிர்ஷ்டம் என்ற பெயரில் அழைக்கிறோம்.
நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம்.அதிர்ஷ்டம் என்பது நமக்கு சம்பந்தம் இல்லாமல் தானாக ஏற்படுவதன்று. நமது அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டத்தையும் தீர்மானிப்பது நாம் மட்டுமே. எனவே முடிந்தவரை நல்ல செயல்களை செய்து எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை நமக்கு ஏற்படுத்திக்கொள்வது நம் கையில் மட்டுமே இருக்கிறது.

எஞ்சியிருக்கும் கர்மபலன்

நாம் செய்யும் செயல்களின் அனைத்து பலன்களையும் நம்மால் அனுபவித்து தீர்த்து விட முடியாது. எஞ்சியுள்ள பலன்கள் எவ்வாறு நம்முடன் தொடர்ந்து வருகின்றன என்பதை புரிந்து கொள்ள கர்ம பலன்களை மூன்றுவிதமாக பிரித்து வேதம் நமக்கு விளக்கம் அளிக்கிறது.

மூன்று வகை கர்ம பலன்கள் –
1.சஞ்சித கர்மம்
2.ப்ராரப்த கர்மம்
3.ஆகாமி கர்மம்

1.சஞ்சித கர்மம் – சஞ்சித கர்மத்தை நெடுங்கால வைப்பு நிதியுடன் (Fixed Deposit) ஒப்பிடலாம். பலனளிக்கும் காலம் (period of maturity) ஒவ்வொரு செயலுக்கும் வேறுபடும்.

2.ப்ராரப்த கர்மம் – சஞ்சித கர்மங்களில் ஒரு பகுதி பருவமடையும் பொழுது அவை ப்ராரப்த கர்மமாக மாறும். இது சேமிப்பு கணக்குடன் (Savings Account) ஒப்பிடலாம்.

3.ஆகாமி கர்மம் – நாம் ஏதாவது ஒரு செயலில் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பாவ புண்ணியங்களை தொடர்ந்து சம்பாதித்துக்கொண்டிருக்கிறோம். இவை ஆகாமி கர்மம் எனப்படும்.இவற்றை வங்கியில் வைத்திருக்கும் நடப்பு கணக்குடன் (Current Account) ஒப்பிடலாம். இவற்றின் பலனை பெரும்பாலும் நாம் அவ்வப்போது அனுபவித்துவிடுவோம். ஆயினும் ஒரு சிறுபகுதி நிச்சயம் எஞ்சி இருக்கும்.

இறக்கும்பொழுது எஞ்சியுள்ள ஆகாமி கர்ம பலன்கள், நாம் பலமுன் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மத்துடன் சேர்ந்து விடும்.
பிறக்கும்பொழுது ஒருகுறிப்பிட்ட அளவு ப்ராரப்த கர்மத்துடன் பிறக்கிறோம். பிறந்தது முதல் இறக்கும் வரை நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் பருவமடையும் ப்ராரப்த கர்மமும் ஆகாமி கர்மமும் மட்டுமே காரணமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *