திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -38

பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி தன்னைப்
பிதற்று ஒழியேன் பெருமைத்தவன் யானே

அம்பலத்தாடும் ஐந்தொழிலருட் கூத்தனாம் பெரியானை மறவா நினைவுடன் அடிமைத் தொண்டு செய்து வழிபடலொழியேன். அலகில் ஒளிப்பிழம்பாய் அருவுருவக் காரணத் திருமேனியாய் எழுந்தருளும் சிவக்கொழுந்தாம் அரியானை மறவா நினைவுடன் மகன்மைத் தொண்டு செய்து வழிபடலொழியேன். நிலவாகிய திருவடியுணர்வு முற்றுப்பெற்ற ஆவியும், அவ் ஆவிக்கு உறுதுணையாக நிற்கும் வனப்பாற்றலாகிய மலிநீராம் திருவருளும் தலையன்பால் தங்க இடமருளி, ஆருயிர் உணர்வின்கண் தோன்றும் புறத்துப் பிறவா ஆற்றல் நிலைக்கள வேணியனாம் உணர்வுருவானை மறவா நினைவுடன் தோழன்மைத் தொண்டு செய்து வழிபடல் ஒழியேன். உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய மெய்யுணர்வுசேர் வாலறிவனை, அவனருளால் புணர்ந்து நந்துதற்கு இடனளிக்கும் அச்சிவனை எஞ்ஞான்றும் வேறன்மையனாய் நின்று மறவா நினைவுடன் காதன்மைத் தொண்டு பூண்டு வழிபடலொழியேன். இவையே யான் பெற்ற இறப்பில் தவம். அதனால் யான் பெருமைத் தவமுடையேனாயினேன். இந் நான்கு நெறியினையும் முறையே சீலம், நோன்பு, செறிவு, அறிவெனக் கூறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *