திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -39

வாழ்த்த வல்லார் மனத்து உள் உறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே

சிவபெருமான் தன்னைத் திருவைந்தெழுத்தால் வாழ்த்தவல்ல நற்றவத்தாரின் தூய திருவுள்ளத்து மிக்க அறிவுப் பேரொளியாய்த் தோன்றுவன். அத்தகைய இயல்பாகவே பாசங்களினின்று நீங்கிய தீர்த்தனை, மேலும் செவ்வி வாய்ந்த உயிர்கள்மாட்டு மகிழ்ந்து திளைக்கும் முழுமுதல் தெய்வத்தினைப் பலவாறாகப் பரவியும், எம் தலைவனே என்று வணங்கியும், அவனுக்கு முற்றும் உரிமையாய்த் தன்னை அறக்கொடுத்தவன் ஆப்தன் – நண்பன் எனப்படுவன். அந்நிலை எய்தியவர் அவன் திருவருள் பெறுவது எளிதாம். ஈசன் – ஆண்டவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *