திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -41

சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சு இடை போற்ற வல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனம் செய்த மான்போல் இணங்கி நின்றானே

சிவனை மறந்து நெடுநாள் வாழவேண்டுமென்னும் கெடு நினைவால் மாலுற்று மாலைத் தலைமையாகக் கொண்டு பாலுற்ற பிறவிக் கடலைக் கடைந்தனர் தேவர். அப்பொழுது சிவனை மறந்த பெரும் பிழை, பொருவருஞ் சினத்துப் பெருநஞ்சாக வெளிப்பட்டது. அதன் வெப்பம் பொறுக்காது தேவர்கள் மாலுள்ளிட்டாரனைவர்களும் ஓட்டம் எடுத்தனர். சிவன்பால் வந்து ஓலிட்டனர். சிவனும் பிழை பொறுக்கும் பெரியோனாதலின் பிழை பொறுத்து அந் நஞ்சினை உண்டு கண்டத்தடக்கினன். தேவர்கட்கு அமிழ்து ஈந்து காத்தனன். அத்தகைய முதல்வனைத் திருத்தப்பட்ட மனத்தின்கண் தொழுதற்கு வல்ல தொண்டர்க்கு, உலகுயிர் எல்லாம் படைத்து வளர்த்தருள் கன்னியாகிய அம்மையை ஒருபக்கத்தேயுடைய சிவபெருமான் அப்பொழுதே தன் இனத்தை நாடும் மான்போன்று அவர்களுடன் இணங்கி நின்றருளினன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *