திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -42

போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும்
வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும்தானே

பற்றற்றான் பற்றினைப் பற்றிப் பற்றுவிட்டுப்போய்ச் சிவபெருமானை மெய்யாகப் புகழ்கின்றவர்கள் பெறுவது நாயகனாகிய சிவபெருமானால் ‘உரையிறந்த சுகமதுவே முடியாகும்’ என்பதற்கிணங்க, எங்கும் இயல்பாகவே சிவமாய்க் காட்டுவித்துப் பேரின்பம் நல்கும் அவ்வருளினையேயாம். மாயாகாரியமாகிய உலகனைத்தும் சூழ்ந்துவர வல்லராகிலும், மூங்கில் போலுந் திருத்தோளையுடைய உமையம்மையார்க்கு மணாளனாகி, ஆருயிர்கட்குப் போகமீன்றருள் புண்ணியப் புனித வேந்தனாம் சிவபிரான் உடன்நில்லாது ஒழியின் பயனில்லை. எனவே அவன் உடனாய் நிற்பதே பெரும்பேறென்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *