திருமந்திரமாலை – பாயிரம் -கடவுள் வாழ்த்து -48

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே.

திருவடி யுணர்வு கைவந்த பொய்யடிமையில்லாத புலவராம் மெய்யடியார் பாடிப் பரவிப் பணிந்து அமரர்பிரானாகிய சிவபெருமானைத் தொழுவர். இவ்வுண்மை ‘பாடிப் பரவிப் பணிதல் ஒருமூன்றும், ஈடிலுரை உள்ளமுடல் எண்’ என்பதனான் உணரலாம். முத்தேவர் முதலிய ஆட்சியினர் முடியார் எனப்படுவர். அவர்களாலும் வணங்கப்படும் முழுமுதல்வன் சிவன். அவன் தன் மெய்யடியார்களைத் திருவுளங் கொண்டு சிறந்தபடியாகிய

இவ்வுலகின்கண் வைத்தருள்வன். அவனே விழுமிய விழுப்பொருள். எமக்குத் தந்தையரும் ஆவன். என்றும் நின்று நிலைபெறும் அருட்பெரும் விளக்கும் அவனே. அவன் அடியேனுடன் புணர்ந்து நின்றனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *