மறுபிறப்பு அறுக்கும் சம்பந்தரின் மணக்கோலத் தலம்

திருஞான சம்பந்தருக்கு உமையின் முலைப்பால் அருந்தியவரென்ற பெருமை உண்டு. அவருக்கு ஆச்சாள்புரத்தில் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று திருமணம் நடை பெற்றது. இத்திருக்கோவில் அமைந்துள்ள தலத்துக்கு சிவலோகம், முக்திபுரம், அணவைநல்லூர், திருநல்லூர் பெருமணம், ஆச்சாள்புரம், ஆச்சாரியாள்புரம், ஆயாள்புரம் என்ற பெயர்களும் உண்டு.

அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் சிவலோக தியாகேசர், சிவலோக தியாகராசர், திருப்பெருமணமுடைய மகாதேவர் என்ற பெயர்களில் வழங்கப்படுகிறார். அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை, நங்கை உமைநாயகி, விபூதி கல்யாணி, சுவேத விபூதி நாயகி என்ற பெயர்கள் உண்டு.

திருஞான சம்பந்தர் சைவம் தழைக்கவும் உலகம் உய்யவும் கந்தனின் அவதாரமாக சீர்காழித் திருத்தலத்தில் அவதரித்தார். அங்கு அம்பிகையால் ஞானப்பால் ஊட்டப்பட்டு சிவஞானம் பெற்றார். இறைவனின் அருளால் அடியார்களுடன் பல்வேறு சிவத்தலங்கள் சென்று பதிகம் பாடினார். சிவபெருமான் கையாலேயே பொற்கிழியும் படிக்காசும் பெற்றார்.

நஞ்சினால் இறந்த வணிகனை பதிகம் பாடி உயிர்ப்பித்தார். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத்தில் அப்பர் பெருமானுடன் சேர்ந்து, அத்தலத்தின் கோவில் கதவை திறக்கவும் அடைக்கவும் செய்தார். பாண்டிய நாட்டில் சமணர்களை வாதத்தில் வென்றார். திருமயிலையில் குடத்தில் உள்ள எலும்பை பூம்பாவையாக உயிர்ப்பித்தார். இப்படியாக பல அற்புதங்களை நிகழ்த்தியவர் திருஞான சம்பந்தர்.

தந்தை சிவபாத இருதயர் தன் மகன் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்தார். சீர்காழியிலிருந்து எட்டு மைல் தொலைவிலுள்ள ஆச்சாள்புரத்தில் வசித்த நம்பியாண்டார் நம்பியின் பெண் தோத்திரப் பூர்ணாம்பிகை சம்பந்தருக்கு பொருத்தமானவளாக இருப்பாள் என அறிந்து, நம்பியிடம் பேசி திருமணத்துக்கு நிச்சயித்தார். வைகாசி மாதம் மூல நட்சத்திரத் தன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஈசனிடமும் இறைப்பணியிலும் நாட்டங்கொண்ட சம்பந்தருக்கு இல்லற வாழ்வை ஏற்பது உவப்பானதாக இல்லை. எனினும் தந்தைக்காக உடன்பட்டார்.

திருமண நாளும் வந்தது. உற்றார் – உறவினரோடு விண்ணுலகின் தேவர்களும் சம்பந்தரின் திருமணக் கோலம் காண வந்தனர். மணமகள் வீட்டருகே இருந்த சிவலோக தியாகேசர் ஆலயத்தில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தோத்திரப் பூர்ணாம்பிகையின் கரம்பிடித்தார் சம்பந்தர். திருமணத்திற்குப் பின்னுள்ள சடங்குகள் நடந்தேறிக் கொண்டிருக்கும்போது சம்பந்தர் மூலவரைப் பார்த்தார்.

“இறைவா! உன் பணியாற்றவே பிறந்த என்னை இப்படி இல்லற பந்தத்தில் இழுத்து விட்டுவிட்டாயே” எனப் புலம்பினார். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்ற திருப்பதிகம் பாடி உருகினார். அப்போது சிவபிரான் உமையுடன் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி கொடுத்தார். “கலங்காதே சம்பந்தா, உனக்கு என்ன வேண்டும்?” என ஈசன் கேட்டார்.

அதற்கு சம்பந்தர், “இறைவா, என் உற்றார் – உறவினர்கள், என் திருமணம் காணவந்தோர், என் மனைவி உட்பட அனைவருக்கும் வீடுபேறு அருளவேண்டும்” என வேண்டினார். “அப்படியே ஆகட்டும்” என்று அருள்புரிந்தார் ஈசன்.

சம்பந்தரின் திருமணத்தைக் காண்பதே பெரும் புண்ணியம்! அத்துடன் ஈசனைக் கண்ட புண்ணியமும் கிடைத்ததை எண்ணி அனைவரும் நெக்குருகி நின்றபோது, இறைவன் ஜோதி ரூபமாக மாறி அனைவரையும் தமக்குள் ஆட்கொண்டார். இறைவனே நேரில் தோன்றி வரமளிக்கும்போது தனக்கென வரம் கேளாமல் “எல்லாருக்கும் பொதுவாய்” வரம் கேட்கும் உயர்ந்த பண்பு சம்பந்தரைப் போன்ற பெரியோர்க்கன்றி வேறு யாருக்கு வரும்!

பொதுவாக எந்த ஆலயத்திலும் உற்சவரை கருவறைக்குள் எடுத்துச் செல்ல மாட்டார்கள். ஆனால் இங்கு திருஞான சம்பந்தரின் திருமணம் முடிந்தபின், சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைப்பர். பின் மிகப்பெரிய கற்பூரக் கட்டியை ஏற்றி தீபாராதனை செய்வர். அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம். இக்காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இதைக் காண்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பது ஐதீகம்.

இத்திருக்கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தர் தோத்திரப் பூர்ணாம்பிகையுடன் மணக்கோலத்தில் காட்சிதரும் சிலைகள் உள்ளன. இங்கு அம்பிகை சந்நிதியில் குங்குமத்துக்கு பதில் திருநீறு பிரசாதமாகத் தரப்படும். அம்மன் சந்நிதியில் திருநீறு தரப்படுவது இந்தக் கோவிலில் மட்டும் தான். இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் பெயர் திருவெண்ணீற்று உமையம்மை என்று அழைக்கப்படுவது இதன் பொருட்டே.

ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம், நமச்சிவாய திருப்பதிகம், கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் தலபுராணம், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் திருவெண்ணீற்று உமை பிள்ளைத் தமிழ், தருமபுர ஆதீன தலவரலாறு ஆகிய நூல்களில் ஆச்சாள்புரமும் அதன் சிறப்பும் இடம் பெற்றுள்ளன. சம்பந்தர் திருமணமும், சிவஜோதி தரிசனமும் கண்டு பிறவிப் பிணி நீங்கி பேரின்பம் பெறுவோம்!

சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி. மி. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். இதே சாலையில் மேலும் 6 கி.மீ. செல்ல மயேந்திரப்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *