திருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -53

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்
பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது
ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார்
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார் களே

இருவினைகட்கு இருப்பிடமாகிய மாயைக்கு அப்புறம் இருப்பவன் வாராத்திருவும் பேராமுதன்மையும் ஒருங்கமைந்த சிவன். அவனே ஈசன் எனப்படுவன். உலகில் பெருந்தெய்வமாவது உருவின் நினைப்பிற்கும் அருவின் நினைப்பிற்கும் காரணமாயுள்ள அருவுருவமேயாகும். அதுவே அருளோன்; அதுவே சதாசிவன்; அதுவே சிவக்கொழுந்து. இவ்வுண்மை யுணர்ந்தவர் அது, இது என்று வேற்றுமைப்படக் கூறார். அங்ஙனமன்றி வேற்றுமைப்படக் கூறுவோர் உண்மை உணரும் நினைப்பிலராவர். அருளால் அகம் புறம் தூய்மை யானோர் உண்மையான முதன்மை மூலத்தை யுணர்ந்தவராவர். அகந்தூய்மை திருவைந்தெழுத்தாலும் புறந்தூய்மை திருவெண்ணீற்றாலும் அமைவன. அது இது: அதுவும் இதுவும் என வேறுபாடும், அதுவே இது என ஒற்றுமையும், அதுவாகிய இது என ஒற்றுமை வேற்றுமை ஆகிய இருமையும் குறியாமல் விளங்கும் பொதுமைப் புணர்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *