images (38)

நட்பை போற்றியவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜரின் முதல்வர் அலுவலகத்திற்கே தேடி வந்தார் அவர். மிகச் சாதாரணமானவர். ஏழ்மையைச் சொல்லும் வேட்டிச் சட்டை. கையில் ஒரு மஞ்சள் பை. அழைத்து அருகில் அமரவைத்துகொண்ட காமராஜர் என்ன ரெட்டியாரே என்று நலன் விசாரித்தார். பிறகு ஏதாவது முக்கிய சேதியா, இல்ல சும்மா பார்க்க வந்தீரா… என்று கேட்கிறார். வந்தவருக்கு தயக்கம்.

பரவாயில்ல சொல்லுங்க ரெட்டியார் என்று மீண்டும் கேட்டார் பெருந்தலைவர்.

ஒன்னுமில்ல. என் மகனுக்கு கல்யாணம். அதான்…..

இதுக்கு ஏன் ரெட்டியாரே தயங்கனும். நல்லவிசேசம்தான என்று தட்டிக்கொடுத்து பாராட்டி… நான் என்னபன்னணும் என்றார் பெருந்தலைவர்.

இல்ல..கல்யாணத்துக்கு நீங்க வரனும்…நீங்கதான் தலைமைதாங்கணும்..ஊரெல்லாம் சொல்லிட்டேன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன் என்று தயங்கியவர் நீங்க வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க… என்று ரெட்டியார் இழுக்க காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது. எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன் என்று கடுமைகூட்டினார்.

அந்த ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது..தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டென் என்றார்.

பெருந்தலைவருக்கு கோபம். உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க என்று பட்டென்று கூறி அனுப்பிவைத்துவிட்டார். முகத்தில் அடித்ததைபோல் ஆனது ரெட்டியாருக்கு.

நடந்ததை வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை. முதல்வர் வரமாட்டார் என்று எப்படி சொல்வது.? பேசாமல் கல்யாணத்தை அவரதுவீட்டில் நடத்துகிறார் எளிமையாக.. அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும். கடைசியில் காமராஜர் வரமாட்டார் என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது. வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள். என்னமோ நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க. என்வீட்டுக் கல்யாணத்துக்கு வருவார்னு பெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு…பார்த்தீங்களா அலம்பல….என்ற ஏளனப் பேச்சு கூடியது….

மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல்கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். எப்படி வெளியில் தலைகாட்டமுடியும். காமராஜரும் நானும் பலவருஷம் ஒன்னா சிறையில் இருந்த நண்பர்கள் என்று ஊரில் நட்புக்கதையை சொன்னவராயிற்றே. திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார் என்று நம்பியவாயிற்றே….
அழுதபடியே படுத்துக்கிடந்தார். அந்த கல்யாண வீடே வெறிச்சோடிப்போனது…..

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு கார் வந்தது. வந்தவர் முதல்வர் காமராஜர் வரபோகிறார் என்ற செய்தியைச் சொன்னார். ரெட்டியாருக்கு நம்பிக்கையில்லை. எந்த நம்பிக்கையில் திரும்ப ஊருக்குள் சொல்வது…? நம்பிக்கையற்று உட்கார்ந்திருந்தார்…

சில நிமிடங்களில் அடுத்த காரில்…பெருந்தலைவரே வந்து இறங்கினார். இரண்டு மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு… ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் சேர்ந்துவிட்டது….

ரெட்டியார் முதல்வரை கட்டித்தழுவிக்கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்… உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம் ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டு….எனக்குத் தெரியும். அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற கஷ்டத்துல கடன் வாங்குவீர்.. முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்..அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன்வீட்டுக் கல்யாணத்துக்கு வராம எங்கபோவன் என்று ஆரத்தழுவினார்..கண்ணீர் ஆனந்தக்கண்ணீரான நேரம் அது…

பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்துவந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார். இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்..ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை…

நட்பை போற்றியவர் காமராஜர். நிலை மாறினால் குணம் மாறலாம் என்று மாறிப்போன மனிதர்களுக்கு மத்தியில்தான் அந்த மாமனிதன்…..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>