திருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -61

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

உலகியல் வேதநூல் ஒழுக்கமாதலின்’ அவ் வேதத்திற்கு அறநூல் என்னும் சிறப்புப் பெயர் உண்டு. செந்தமிழ்ப் பொது அறநூல் திருவள்ளுவநாயனார் அருளிய திருக்குறளாகும். அக் காரணம் பற்றியே அதற்குப் பொதுமறை என்னும் திருப்பெயரும் வழங்குவதாயிற்று. வீட்டியல் அறநூல் செந்தமிழ்ச் சிறப்புமறை. அதுவே திருநான்மறை முடிவாம் மூவர் தமிழ். எனவே அம் மறையினை விட்டு வேறாக அறவொழுக்கம் இல்லை. அம் மறையின்கண் ஓதத்தகுந்த அற இயல்புகள் அனைத்தும் உள. வீண் அளவை முறையான் வழக்கிடும் வல்லாண்மையை விட்டுத் திருவடியுணர்வு கைவந்த நுண்மதி வாய்ந்த நல்லார் எல்லா முறைவளமும் நிரம்பப் பெற்ற ‘செந்தமிழ்த் திருநான்மறையினை இடையறாது இனிது ஓதித் திருவடிப் பேறாகிய வீடு பெற்றார்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *