மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும் !

 ஞானியிடம் !!

ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்…!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ”எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?”
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ”என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்’ என்றனர்.

”ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம்
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம்
திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்” என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்…!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !

தித்திக்கும்னிங்க கசக்குதே…!
என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!

“பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் , எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்
என்ன பயன் வந்து விடப் போகிறது?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *