கடவுள் விருப்பம்

விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காப்பதற்காகச் சென்ற ராமர், அப்படியே மிதிலை சென்று சிவதனுசை முறித்து, சீதையை மணம் செய்து கொண்டு அயோத்திக்குத் திரும்பினார். நாட்டு மக்கள் எல்லோரும் ராமபிரானை வாழ்த்தி விதவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகா இரு பாதுகைகள் இருந்தன. வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப்பொருட்களைத் தந்துகொண்டிருந்தார்கள். அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. எல்லோரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும்போது, தான் மட்டும் அற்ப காலணிகளையா தருவது? என நினைத்தவன், ராமரைப் பார்க்கப் போகாமலே திரும்ப யத்தனித்தான். அதனை கவனித்துவிட்ட ராமபிரான், அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே! ராமர் சொல்ல, அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து.

ராமபிரான் வனவாசம் செல்லப் புறப்பட்டபோது, தாயே, வனவாசம் செல்லும்போது எதையுமே எடுத்துச் செல்வது கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங்கள்! என்று கேட்டு அனுமதி வாங்கினார். கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கினார், விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன! என்றார். உண்மை அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகளே பின்னர், அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

கடவுளுக்கு யார், என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் உங்களால் முடிந்ததை மனப்பூர்வமான பக்தியுடன் அவரது திருவடிகளில் சமர்ப்பியுங்கள். அது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும். இறைவனுக்குப் பிரியமானதாகவும்இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *