நீதிக்கதை

ஒரு வைத்தியரும் அவருடைய உதவியாளரும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர். குரு என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது! குருவும் சொன்னதில்லை! சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் குருவுக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!

ஒருநாள் குரு வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே சீடனை காணவில்லை. மாறாக இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். குருவை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தான். குருவுக்கு ஒன்றும் புரியவில்லை. யாரப்பா நீ என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன் குருவே நான்தான் உங்கள் சீடன். என்றான். குருவுக்கு மிகவும் குழப்பம். என்ன நடந்தது என்று கேட்க சீடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்

” குருவே! உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன் குருவே. நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைஞனாகிவிட்டேன்” என்றான்.
குரு பதறி அடித்துபோய் ” எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் ” என்று கேட்க அதற்கு அந்த சீடன் “அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? ” என்றான். குரு நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!

(தத்துவம்)
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது!

(யதார்த்தம்)
பெரும்பாலும் பயன் தெரியாதவர்களிடம் தான் சில விஷயங்கள் அகப்பட்டுக்கொள்கின்றன! அவர்கள் பலனடைந்தாலும் அடுத்தவர்கள் பலனடைய விடாமல் செய்து விடுகிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *