அம்மா! அம்மா! நீ பாக்யஶாலி!

பெரியவா பல பக்தர்களுக்கு அழகாக ‘nickname’ வைத்துக் கூப்பிடுவார். அப்படியொரு ‘nickname’ பெரியவாளால் சூட்டப்பட்ட பாக்யஶாலி… வைஷ்ணவ வெங்கட்ராமன்.

வைஷ்ணவர் என்றாலும், பெரியவாளும், பெருமாளும் ஒன்றே! என்ற அசைக்க முடியாத பக்தி! அவர் மட்டுமில்லை, அவருடைய பெற்றோர், குடும்பத்தினர் அத்தனை பேருக்குமே, பெரியவாதான் “ப்ரத்யக்ஷ பெருமாள்”

அவருக்கு ஒருமுறை காஶிக்கு யாத்ரை செல்லும் பாக்யம் கிடைத்தது. ஏதோ காரணங்களால், அவருடைய தாயாருக்கு அவருடன் காஶியாத்ரை செய்ய முடியவில்லை. காஶி யாத்ரையை ஶுபமாக முடித்துக் கொண்டு, பெரிய சொம்புகளில் கங்கையை க்ருஹத்துக்கு கொண்டு வந்து, அம்மாவிடம் குடுத்து நமஸ்கரித்தார்.

“பெரியவா அனுக்ரஹம்…. க்ஷேமமா போய்ட்டு வந்தியேப்பா! எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை….”

“சொல்லும்மா…..”

“இந்த கங்கா ஜலத்தை பெரியவாகிட்ட சேத்துடு….! ஒரு பூர்ண அமாவாஸ்யை அன்னிக்கி, பெரியவா இந்த கங்கா ஜலத்தால, தனக்கு அபிஷேகம் பண்ணிண்டார்னா…. என் ஜன்மம் ஶாபல்யம் அடஞ்சுடும்…!.”
பெரியவா மேல் உள்ள, மிகவும் ஆழ்ந்த அன்பினால், அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

தனக்காக கங்கா ஜலமும், தன் பக்தையும் காத்துக் கொண்டிருப்பது ‘பெருமாளுக்கு’ தெரியாதா என்ன?

ஸீக்ரமே, வெங்கட்ராமன், பெரியவாளை தர்ஶனம் செய்யும் பாக்யம் பெற்றார்.

அப்போது பெரியவா துங்கபத்ரை தவழ்ந்தோடும், ஹம்பியில் முகாம். அங்குள்ள ஒரு சின்ன ஶிவன் கோவிலில் தங்கியிருந்தார்.

அன்று அமாவாஸ்யை !

வெங்கட்ராமன், கங்கைச் சொம்பை பெரியவா முன் ஸமர்ப்பித்து விட்டு, நமஸ்காரம் செய்தார்.

“என்ன?… காஶி யாத்ரை நன்னா முடிஞ்சுதா?…”

“பெரியவா அனுக்ரஹம்……நல்லபடி ஆச்சு…”

“ராமேஶ்வரம் போய்ட்டு வந்துட்டியா?……”

“ஆச்சு பெரியவா…..”

கங்கைச் சொம்பை தொட்டு, தன் பக்கம் லேஸாக நகர்த்திக் கொண்டார்.

ஹம்பியிலும் நல்ல கூட்டம்! அதிலும் படே படே ! ஆஸாமிகள் அன்று தர்ஶனத்துக்கு வந்திருந்தார்கள்.

அப்போது ஆந்த்ர முதலமைச்சராக இருந்த திரு. சென்னா ரெட்டி, அவருக்கு காவலாகவும், கூடவும், வந்திருந்த ஒரு பெருங்கூட்டம்!
அடுத்தது, Prince of Wales Charles, பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார். அவருடன் கிட்டத்தட்ட 200 பேர் வந்தார்கள்.
ஒரே கெடுபிடி!

பெரியவா முன்னால் ஏகப்பட்ட பழங்கள், புஷ்பமாலைகள், ஸால்வைகள், பரிஸுப் பொருட்கள் என்று குவிந்ததில், கங்கைச் சொம்பு தெரியவேயில்லை!

எல்லாம் முடியும்போது, கிட்டத்தட்ட மத்யானம் மூணு மணியாகிவிட்டது!

வெங்கட்ராமனின் கண்கள் எங்கேயோ இத்தனூண்டு தெரிந்த, கங்கைச் சொம்பையே பார்த்துக் கொண்டிருந்தன!

“அமாவாஸ்யை கார்த்தாலயே ஆய்டுத்தே! பெரியவா கங்கையால அபிஷேகம் பண்ணிப்பாளா? மாட்டாளா?”
வெங்கட்ராமன் எண்ணி முடிக்கவில்லை..! பெரியவா தண்டத்தை ஊன்றிக் கொண்டு எழுந்தார்!

பக்கத்திலிருந்த பாரிஷதரிடம், கண்ஜாடை காட்டவும், அவர், அங்கிருந்த கங்கைச் சொம்பை எடுத்துக் கொண்டு, பெரியவாளுடன் நடந்தார்.

“பெரியவா ஸ்நானம் பண்ணப் போறா….”
கூட்டத்தில் யாரோ, யாரிடமோ சொன்னார்கள்!
[பகவான் நம்முடன் direct-டாக பேசாமல், இப்படித்தான் யார் மூலமாகவோ பேசி, ஆனந்தத்தை வாரி தெளிப்பான்]
வெங்கட்ராமன், ஜிவ்-வென்று எழும்பி, ஆனந்தத்தின் உச்சியை உணர்ந்துவிட்டு, பெரியவாளுடன் கூடவே ஓடினார்!

ஆம்…! பெரியவா குள்ள உருவமாக இருந்தாலும், அவர், ஸாதாரண வேகத்தில் நடந்தாலும், நாமெல்லாம் அவருடன் தலை தெறிக்க ஓடினால்தான், அவருடைய ‘நடக்கும் ஸ்பீடுக்கு” ஈடு குடுக்க முடியும்.! இது அவதார புருஷர்களுக்கு மட்டுமே உண்டான ஒரு தனித்தன்மை! ஶக்தி!

துங்கபத்ரை ஓடும் இடத்துக்கு வந்ததும், கீழே பல படிகள் இறங்கினால்தான், நதியில் குளிக்க முடியும். பெரியவா, ‘விடுவிடு’வென்று படிகளில் இறங்கி, விதிவத்தாக நதியை வந்தனம் செய்துவிட்டு, உள்ளே இறங்கினார்.
அப்போது மணி, ஸரியாக மத்யானம் 3.22.
வெங்கட்ராமன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரெண்டு பாரிஷதர்கள் பேசிக் கொண்டனர்….. வெங்கட்ராமன் காதில் விழும்படியாக!

“பாத்தியா! இன்னிக்கி கரெக்டா 3.22க்குத்தான் அமாவாஸ்யை பொறக்கறது! பெரியவான்னா…. பெரியவாதான்! ராஜா, மந்த்ரி யார் வந்தாலும், அப்டியே விட்டுட்டு, ஶாஸ்த்ரத்தை விட்டுக்குடுக்காம, அமாவாஸ்யை பொறக்கற டயத்துக்கு, நதில ஸ்நானம் பண்ண வந்துட்டார் பாரேன்!…….”

வெங்கட்ராமனின் ஒரு கண்ணில் துங்கபத்ரையும், மற்றொரு கண்ணில் கங்கையும் ஓடினார்கள்.

“பெருமாளே! இதுக்குத்தானா…..? இதுக்குத்தானா? எங்கம்மாவோட ஆத்மார்த்தமான ஆசையைப் பூர்த்தி பண்ணத்தானா?…..ஒன்னோட அனுக்ரஹத்தை தாள முடியலியே என் அப்பா…….”

பெரியவாளுடன், வெங்கட்ராமனும் இடுப்பளவு ஜலத்தில் நின்று கொண்டு, பெரியவா திருமேனி தீண்டிய புனித ஜலத்தில் தன் ஶரீரத்தையும், பெரியவாளின் அன்பு எனும் கங்கையில் மூழ்கிய, தன் மனஸையும் ஆனந்தமாக முழுக்காட்டிக்கொண்டிருந்தார்.

இதோ….. சொம்பில் இருந்த கங்கா ஜலம், பெரியவாளின் தலைக்கு மேல் கவிழ்க்கப்பட்டது!

இத்தனை நாள் பிரிந்திருந்த தன் ப்ராணபதியான பரமேஶ்வரனின் ஶிரஸை மறுபடி எப்போடாப்பா…. அலங்கரிப்போம்? என்று தாபம் அடைந்தவளாக இருந்ததால், அந்தச் சொம்பிலிருந்து ‘மளமள’வென்று கங்காதரனின் திருமுடியில் ‘பூக்கள்’ போல மலர்ந்து விழுந்தாள்.

அதோடு, விண்ணைப் பிளக்கும் “ஹர ஹர ஶங்கர; ஜய ஜய ஶங்கர” கோஷமும் சேர்ந்து, பகீரதன் தபஸ்ஸால் கீழே பூமிக்குப் பாய்ந்த கங்கை, மஹாதேவனின் திருமுடியில் அடைக்கலமாகி, பின் பூமியில் அழகாக விழுவது போல் இருந்தது.

“அம்மா! அம்மா! நீ பாக்யஶாலி!….. பெரியவா ஒன்னோட பக்தியை ஸ்வீகரிச்சிண்டுட்டார்!…”
மானஸீகமாக, அம்மாவையும் நமஸ்கரித்தார் வெங்கட்ராமன்.

சிலிர்க்கிறது !….

ஸ்நானம், அனுஷ்டானம் முடிந்து, பெரியவா ‘கிடுகிடு’ வென்று லாவகமாக படிகளில் ஏறி, மண்ணில் நடந்து ஶிவன் கோவிலை அடைந்தார்.

பின்னால் கொஞ்சம் தாமஸித்து வந்த வெங்கட்ராமனின் கண்களுக்கு மட்டும் தெரியும்படியாக ஒரு மஹா மஹா பாக்யத்தை விட்டுவிட்டுப் போயிருந்தார் பெரியவா!
என்ன அது?

பெரியவாளைப் பின்தொடர்ந்து அத்தனை பேர் போயிருந்தாலும், அந்த மண்ணில் பெரியவாளுடைய பாதங்கள் பதிந்த தடம், வேறு யாருடைய காலும் படாமல், ‘பளிச்’சென்று பெரியவாளால் வெங்கட்ராமனுக்கு மட்டும் ‘காட்டி அருளப்பட்டது’!

கையிலிருந்த ஒரு பட்டுத் துணியில், பெரியவா பாததூளியை “ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” நாமத்துடன் பத்ரப்படுத்தி வைத்துக் கொண்டார்.

பாற்கடலை கடைந்து எடுத்த அம்ருதத்தை விட, கோடானுகோடி உத்க்ருஷ்டமானது, மஹாபுருஷர்களின் பாததூளி! பெரியவாளின் பாததூளி இருக்கும் க்ருஹத்தில் வேறு ஸாதனையே தேவையில்லை! வேறு வைத்யமே தேவையில்லை! வேறு தபஸே தேவையில்லை!
வெங்கட்ராமன் பத்ரப்படுத்தி, பூஜையில் வைத்திருந்த பெரியவாளின் பாததூளி, ஸரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது!

எதற்கு?

நாலு வர்ஷங்கள் கழித்து, பெரியவாளின் பரமபக்தனான குஜராத்தை சேர்ந்த குலபதி டாக்டர் S.பாலக்ருஷ்ண ஜோஷியை எமன் வாயிலிருந்து தட்டிப்பறிக்க!

குலபதி டாக்டர் S.பாலக்ருஷ்ண ஜோஷி என்ற பக்தர், ஹிந்துதர்ம ஶாஸ்த்ரம், கலாசாரம் பற்றிய உரைகளை, ஸம்ஸ்க்ருதத்தில் இருந்து , குஜராத்தி மொழியில் translate பண்ணும் ஒரு பெரிய பணியை, பெரியவா உத்தரவின்படி செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்தான், என்றாலும், அதற்காக தன் பணியை விடவில்லை.

ஆனால், இம்முறை வந்ததோ….. ‘massive attack’!
ICU-வில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார்! ஒரே tube மயமாக இருந்தார்! பிறகு நாலைந்து நாட்கள் கழித்து, ஏகப்பட்ட பயமுறுத்தல் கண்டிஷன்களோடு அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, அடுத்த ரெண்டு நாட்களில் அவருக்கு ரொம்ப மேஜர் ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்பதால், அவர் மறுபடியும் அட்மிட் ஆகவேண்டிய நாளையும் குறித்துக் குடுத்தார்கள்.

“இந்த ஆபரேஷன் கட்டாயம் பண்ணித்தான் ஆகணும்! பண்ணாவிட்டால், பிழைப்பது ஸந்தேஹம். பண்ணினாலும், ஸந்தேஹம்”
டாக்டர்கள் ஸந்தேஹமாக இழுத்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்த வெங்கட்ராமன், மெட்ராஸில் தன் நண்பரான பாலக்ருஷ்ண ஜோஷியை ஸந்தித்து உடல்நலம் விஜாரிக்க வந்தார்.

அவருடன் கூடவே…. பெரியவாளும் வந்தார்! …….
பாததூளி வடிவில்!

“வாப்பா! வெங்கட்ராம்!…….”

ஜோஷி சிரித்தபடி வரவேற்றாலும், உள்ளூர அந்தச் சிரிப்பில் ஒரு கவலை இழையோடியது.
“கவலைப்படாதீங்கோ ஸார்! பெரியவா பாத்துப்பா…..”

“எனக்கு ஸாவைப் பத்தி பயமில்லப்பா..! ஆனா, பெரியவா எங்கிட்ட குடுத்த assignment-டை முடிக்காமயே போய்ச் சேந்துடுவேனோன்னு கவலையா இருக்கு….”

“கவலையே படாதீங்கோ ஸார்! பெரியவா குடுத்த வேலையை செஞ்சு முடிக்கத்தான் போறேள்! ஒங்களுக்காக ஒரு அருமையான ஔஷதம் கொண்டு வந்திருக்கேன்! பெரியவா அனுப்பியிருக்கா-ங்கறதுதான் ஸத்யம்!……. தேவரீர், கொஞ்சம் ஷர்ட் பட்டனை கழட்டுங்கோ சொல்றேன்”

பெரியவா…. என்ற மஹாமந்த்ரமே.. ஸர்வரோகநிவாரணி!

ஜோஷி, ஷர்ட் பட்டனை தளர்த்திக் கொண்டதும், வெங்கட்ராமன், ஹம்பியில் நான்கு வர்ஷத்துக்கு முன்னால், பட்டுத்துணியில் பத்ரப்படுத்தி வைத்த, காலாந்தகமூர்த்தியின் பாததூளியை கொஞ்சம் எடுத்து, ஜோஷியின் நெஞ்சு முழுக்க “ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர” என்று ஜபித்துக்கொண்டே தடவி விட்டார்.

ஜோஷியின் ஹ்ருதயம், அதுவரை கவலையால் கனத்திருந்தது! இப்போதோ…. பெரியவாளின் சரணதூளி ஸ்பர்ஶத்தால் கிடைத்த ஆனந்தத்தால் இறகைவிட லேஸாகிப் போனது!
வெங்கட்ராமன் ஸந்தோஷமாக அன்றே ஊருக்குத் திரும்பினார். ஜோஷி மறுநாள் காலை ஐந்து மணிக்கு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆவதற்காக சென்றார். அட்மிஷன் போடும் முன், ரெகுலராக எடுக்கும் டெஸ்டுகளை எடுத்தார்கள்.

ஒருமணிநேரம் அங்கே காத்திருந்தார், ரூம் allot பண்ணுவதற்காக!

டெஸ்ட் ரிபோர்ட்ஸ் வந்தது!

இவருடைய டாக்டர், Chief டாக்டர், மற்றவர்கள் எல்லாரும், அந்த ECG-யை, எல்லாப் பக்கமும் திருப்பிப் பார்த்தார்கள்.

“என்ன Mr ஜோஷி? எங்களுக்கு எதுவும் புரியல….! ICU-ல நீங்க அட்மிட் ஆனப்போ, ரொம்ப ஸீரியஸ் கண்டிஷன்ல இருந்தீங்க..! வேற ஆயுர்வேதா, அது இதுன்னு எதாவுது இந்த ரெண்டு நாள்ள ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டீங்களா?……..”

[ஆயுர்-ராவது? வேதா-வாவது? ஆயுஸைக் குடுக்க, அந்த வேதவேத்யனே வந்துவிட்டானே!]

“இல்லியே…… டாக்டர்”

“ரெண்டு நாள்ள… ஒங்க entire system-மே.. change ஆய்ருக்கே Mr ஜோஷி?..”

“இன்னும் மோஸமாயிடுத்தா டாக்டர்….?”

“எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் நார்மல்-ன்னு வந்திருக்கு…! இவ்வளவு பெரிய ஒரு massive attack வந்ததுக்கான evidence-ஸே இப்போ எடுத்த ரிப்போர்ட்ல இல்ல….! இது எப்படி possible-ன்னு எங்களுக்கு புரியல…..!.”

ஜோஷியின் ஹ்ருதயமும், கண்களும் ஸந்தோஷத்தில் விரிந்தன!

“டாக்டர்…. எங்களுக்கு கண்கண்ட தெய்வம் காஞ்சி பெரியவாதான்! நேத்தி என்னோட friend, ‘ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர’-ன்னு சொல்லிண்டே, பெரியவாளோட பாத தூளியை என்னோட நெஞ்சுல பூசிவிட்டான்! அவன் அப்டி பூசும்போதே, எனக்குள்ள ஏதோ ஊடுருவற மாதிரி feel பண்ணினேன்….! நிச்சியமா என்னோட மஹாப்ரபு என்னைக் காப்பாத்திட்டார்!…”

அழுதேவிட்டார் ஜோஷி!

காஞ்சிபுரம் இருந்த திசையை நோக்கி நமஸ்கரித்தார். பெரியவாளின் சரணதூளி ஊடுருவிய பின், எந்த அட்டாக் என்ன பண்ணமுடியும்?

பெரியவா குடுத்த பணியை திருத்தமாக முடித்தார். பல காலம் ஜீவித்திருந்தார்.
நம்முடையதும் ரொம்ப massive ஸம்ஸார attack-தான்! பெரியவாளின் சரணகமலத்தை ஸ்மரித்துக் கொண்டே இருப்போம்….. இனி பிறவியே இல்லாமல் ஐக்யமாவோம் !
இதெல்லாம் நடந்திருக்குமா? இதெல்லாம் ஸாத்தியமா? என்ற ஸந்தேஹம் பலபேருக்கு வரலாம்.

ஒரு குழந்தையானது, தன்னை பெற்றெடுத்தவர்களை எப்படி நம்பி, தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கிறதோ, அப்படி, நம்மை மீறிய அந்த மஹா ஶக்தியிடம் நம்பிக்கை வைத்துதான் பாருங்களேன்!
நம்பிக்கை வைப்பதில் நஷ்டம் எதுவும் இல்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *