பசுபதிநாத் கோவில்

தல புராணம்

 

இக்கோவில் எப்போது நிறுவப்பட்டது என்பது உறுதியாக அறியப்படவில்லை. நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி.

ஒரு கதை நம்பப்படுகிறது. அஃது, கைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில் காத்மாண்டுப் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார்.

பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய மான் வடிவில் மாறுவேடம் பூண்டார்.

அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம்மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் சிவன் பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். திருமால் அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின.

பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச் சிலையை உருவாக்கினார். காலப்போக்கில் அக்கோவிலானது சிதைவடைந்தது. மேலும் அது யாராலும் கண்டுகொள்ளப்படவும் இல்லை. பின்னர் ஒரு நாள் ஓர் ஆடு அம்மண்மேட்டின் மீது பாலைச் சுரந்தது. அவ்விடத்தைச் சுற்றி அந்த ஆடு தன் கால்களால் தோண்டப் புதையுண்ட கோவில் வெளிப்பட்டது. பின்னர் அந்த லிங்கச் சிலை கண்டறியப்பட்டு மீண்டும் கோவில் நிறுவப்பட்டது.

பசுபதிநாத் கோவிலைப் பற்றி விவரிக்கும் பிற கதைகள்

 

இடையன் கதை

 

சிவன் முறை ஒரு மான் வடிவம் எடுத்துக் பாக்மதி ஆற்றின் காடுகளில் அலைந்து திரிந்த போது கடவுளர் அந்த மானைப் பிடிக்க அதன் கொம்புகளைப் பற்றினர். அப்போது அக்கொம்பு உடைந்து சிவனின் உரு வெளிப்பட்டது. அது முதல் அம்மானின் உடைந்த கொம்பு ஒரு லிங்கமாக வழிபடப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அது புதையுண்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஓர் இடையன் தான் மேய்த்து வந்த மாடு அங்கு தானே பால் பொழிந்ததைக் கண்டு, அங்கே லிங்க உருவத்தைக் கண்டறிந்தான் எனக் கூறப்படுகிறது.

லிச்சாவி வம்சம்

 

நேபாளத்தின் லிச்சாவி வம்சாவளியைச் சேர்ந்த கோபால்ராஜ் என்ற அரசன் காலத்தில் கிடைத்த, கி.பி. 753 -ஐச் சேர்ந்த, ‘இரண்டாம் ஜெயதேவர்’ என்பவரால் அமைக்கப்பட்டு, இக்கோயிலின் வெளிச்சுற்றில் கிடைத்த கல்வெட்டுச் சான்றின்படி இக்கோவில் ‘சுபஸ்பதேவர்’ என்பவரால் கட்டப்பட்டது. அவரது காலம் தொடங்கி அதாவது கி.பி. 464-505 வரை 39 தலைமுறைகளாக ‘மானதேவர்’ என்பவரின் காலம் வரை அக்கோயிலில் வழிபாடு நடந்தமைத் தெரியவருகிறது.

கோவில் சான்றுகள்

 

சுபஸ்பதேவர் இங்கு ஐந்து நிலை மாடங்கள் கொண்ட கோவில் அமைப்பதற்கு முன்பே அங்கு லிங்க வடிவத்தில் இறைவனை வழிபாடு செய்யும் கோவில் ஒன்று இருந்தது. காலப்போக்கில் இந்தக் கோவிலை பழுதுபார்த்து புணரமைக்கும் தேவை எழுந்தது. எனவே இங்கு சுபஸ்பதேவரால் கோவில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பின்னர் இடைக்காலத்தில் இந்த கோவில் ‘சிவதேவர்’ (கி.பி.1099-1126 ) என்ற மன்னரால் மறுகட்டுமானம் செய்யப்பட்டதாகவும் அதன் பின் ஆனந்த மல்லர் என்ற அரசன் இக்கோவிலுக்கு ஒரு கூரை அமைத்து அதனைப் புதுப்பித்தார் எனவும் கோவில்சான்றுகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *