தண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு…

 

சமீபத்தில் ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது.

ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது, மணல் திருட்டு, தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன்.

அதைக் கேட்ட நண்பர், “ஏங்க அப்ப அங்க பெரிய பெரிய முனிவர்கள்ல்லாம் தவம் பண்ணிருப்பாங்களே” என்று பரபரக்க கேட்டார். “இருக்கலாம்ங்க..ஏன் கேக்குறீங்க” என்றதும், “டாக்டர் மசாரு இமோடோ பற்றி தெரியுமா? கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.

டாக்டர் மசாரு இமோட்டோ (Dr.Masaru Emoto). ஜப்பானைச் சேர்ந்த மிகப் பெரிய ஆராய்ச்சியாளர். தண்ணீர் பற்றிய இவரது ஆராய்ச்சிகள் உலகளவில் மிகவும் பிரசித்தம். இவர் தண்ணீரைப் பல வகைகளில் ஆராய்ந்து தண்ணீருக்கு இருக்கும் அசாத்திய ஞாபகத்திறன் பற்றி பல ஆராய்ச்சிகட்டுரைகளை, புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

தண்ணீர் தனக்கு தரப்படும், தான் கடந்து செல்லும் பாதையில் தன் மேல் விழும் தகவல்களை அப்படியே தேக்கி தனக்குள் வைத்துக் கொள்ளும். அதை வெளிப்படுத்தவும் செய்யும். .

ஒரு ஜாடி நிறைய தண்ணீரை நிரப்பி அதற்கு முன் அமர்ந்து கொண்டு தியானம் செய்கையில், அந்த தியானத்தை தண்ணீர் அப்படியே தனக்குள் வாங்கிக் கொண்டது. அந்த தண்ணீரை எடுத்து அதனை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக ஆராய்ந்ததில் தண்ணீர் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிக அழகாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அதே ஜாடி தண்ணீரை எடுத்து- எனக்கு நோய்கள் வர நீ தான் காரணம் என்று பழித்து, கோபத்தையும், கொடூரத்தையும் வெளிப்படுத்திய போது, அதன் மூலக்கூறுகளின் வடிவங்கள் மிகப் பயங்கரமானதாக இருந்தது.

இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தண்ணீர் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தியதை டாக்டர் மசாரு இமோடோ வின் ஆராய்ச்சிகளில் நிருபணமாகியுள்ளது.

உலகளவில் எல்லா மதங்களிலும் தண்ணீருக்கு என்று தனி இடம் உள்ளது. யோர்டான் நதிக்கரையில் இயேசுவிற்கு ஞானஸ்னானம் தரப்பட்டதும் தண்ணீரால் தான்.

பள்ளிவாசல்களில் ஓதிவிட்டு பின் தெளிப்பதுத் தண்ணீரால் தான்.

இந்து மதத்தில் தண்ணீர் இன்றி எந்த சடங்கும் இல்லை. யாகம் முடிந்து, ஹோமங்கள் முடிந்து தண்ணீரைத் தான் அனைத்து இடங்களிலும் தெளிப்பார்கள்.

பெரிய ஞானிகள், முனிவர்கள் தவம் செய்தது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் கரைகளில் தான்.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று நம் முன்னோர் சொல்லி வைத்ததும் இதனால் தான்.

தண்ணீருக்கு ஞாபகத்திறன் உள்ளது. அது தனக்குள் தரப்படும் நன்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு தந்துவிடும். பெரிய பெரிய முனிவர்கள் ஆற்றங்கரை ஓரத்தில் தவங்களைச் செய்து தங்களது ஆற்றலை அந்த தண்ணீரில் விட்டனர். அந்த தண்ணீர் அது ஓடும் இடங்களில் எல்லாம் அந்த ஆற்றலைத் தந்தது.

ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்கிறது விஞ்ஞானம். அதாவது energy conversion law.

மழையும் கூட ஆற்றலின் வடிவம் தான். அது தனக்குள் இயற்கை தரும் தகவல்களைக் கொண்டு வந்து பூமியில் தெளிக்கிறது. அதனால் தான் பயிர்கள் செழிக்கின்றன. உயிர்கள் செழிக்கின்றன.

அதே மழை அளவுக்கதிகமாக பெய்யும் போது வெள்ளம் வருகிறது. எது அளவு, எது அளவுக்கு அதிகம் என்று தீர்மானிப்பது இயற்கை தான். அந்த தீர்மானத்தை ஒரு தகவலாக மழையின் துளிகளில் பதிய வைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது இயற்கை.

கெடுப்பதும் கெட்டாருக்கு சார்வாய் மற்றாங்கே, எடுப்பதும் எல்லாம் மழை–என்கிறார் வள்ளுவர். கொடுப்பதும் மழை, கெடுப்பதும் மழை என்கிறார்.
இப்பேற்பட்ட சக்திகளைக் கொண்ட ஆற்றை அதன் தண்ணீரைத் தான் நாம் பல வழிகளில் பாழ்படுத்துகிறோம். எப்படியெல்லாம் கெடுத்து நாசமாக்குகின்றோம் என்பதை உங்களது முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன்.

இறுதியாக,உறுதியாக ஒன்று,

மனித உடலும் 75% தண்ணீரால் ஆனது. மனித மூளை 90% தண்ணீரால் ஆனது. தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. அது தனக்குத் தரப்படும் தகவல்களை வைத்தே தன் குணத்தை அமைத்துக் கொள்ளும்.

எனில் நமது உடலின் சக்தியை சற்று நினைத்துப் பாருங்கள்…..

(The Magic of Water,Doctor Masaru Emoto என்று இணையதளத்தில் தேடிப்பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *